T20 World cup : டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்..? முன்னாள் கேப்டன் கங்குலி கணிப்பு..!
நடப்பு டி20 உலககோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்று பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் கங்குலி கணித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலி டி20 உலகக் கோப்பை 2022 பற்றிப் தனது கணிப்பை கூறியுள்ளார். இந்த உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டிகளுக்கு செல்ல இருக்கும் முதல் நான்கு, அணிகள் யார்? யார்? என்று கணித்துள்ளார்.
சவுரவ் கங்குலி
கங்குலி நீண்ட காலமாக கிரிக்கெட் உலகில் உள்ளவர். பி.சி.சி.ஐ. தலைவர் பதவி மாறினாலும் களத்திற்கு வெளியே கிரிக்கெட்டுடனான அவரது தொடர்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டம் இன்று நடந்துகொண்டிருக்கும் நிலையில், ரோஹித் சர்மா அண்ட் கோ போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட கங்குலி வாழ்த்து தெரிவித்தார். 2021 இல் நடந்த கடந்த உலகக் கோப்பையில் விராட் கோலியின் தலைமையின் கீழ் இந்தியா பாகிஸ்தானுடன் தோல்வியை தழுவியது. மேலும், அந்த தொடரில் கோப்பையையும் வெல்லமுடியாமல் போனது. அதனால் அதற்காக பழி தீர்க்க இந்திய அணி உத்வேகத்துடன் விளையாடி வருகிறது.
கடந்த காலத்தை நினைக்க வேண்டாம்
கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா ஏமாற்றமளிக்கும் வகையில் வெளியேறியது பற்றி பேசுகையில், கங்குலி நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும், கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வலியுறுத்தினார். உலகக்கோப்பையில் பல ஆண்டுகளாக இந்தியா பல தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் போட்டியில் 'பிடித்த' அணிகள் பல இருந்தாலும், சூப்பர் 12 இன் முதல் ஆட்டமான ஆஸ்திரேலியா நியூசிலாந்து இடையேயான போட்டி, எதுவும் நடக்கலாம் என்பதை நிரூபித்தது. நியூசிலாந்து நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
நாம் பலமான அணிதான்
கங்குலி பேசுகையில், "முன்பு என்ன நடந்தது, என்பதைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை. இப்போட்டியில் இந்தியா வெற்றிக்கு அருகில் செல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கும். உலகக் கோப்பையில் போட்டிகள் முற்றிலும் மாறுபட்டது. அந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் சிறப்பாக விளையாடும் அணிகள்தான் முத்திரை பதிக்கும். நம் அணியினரும் ஒரு நல்ல பலமான அணிதான். நம் அணியில் பெரிய வெற்றியாளர்கள் இருக்கிறார்கள். டி20 போன்ற குறுகிய வடிவத்தில், அந்த நேரத்திற்கான ஃபார்ம் மிகவும் முக்கியமானது,”என்று கங்குலி கூறினார்.
கங்குலியின் 4 அணிகள்
போட்டியின் முதல் சுற்றில் கடுமையாக போராடிய பின்னர், இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இப்போது, 12 அணிகள் உள்ளே செல்ல போராடும் போட்டிதான் சூப்பர் 12 என்று அழைக்கப்படுகிறது. 12 அணிகள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் விளையாடுகின்றன.
இதனிடையே, சவுரவ் கங்குலி அரையிறுதிக்கு முன்னேறப் போகும் நான்கு அணிகளை கணித்துள்ளார். அவர் கணித்தபோது, "நான் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை தேர்வு செய்வேன். தென்னாப்பிரிக்கா ஒரு சிறந்த பந்துவீச்சு அணி, அது ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.” என்று அவர் கூறி முடித்தார்.