(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NAM: வெற்றியுடன் கேப்டன்சியில் இருந்து விடைபெறுவாரா விராட்கோலி..? நமீபியாவுடன் இன்று மோதல்!!
உலககோப்பை டி20 ஆட்டத்தில் இந்திய அணி தனது கடைசி போட்டியில் நமீபியாவுடன் இன்று மோதுகிறது. இந்த போட்டியுடன் விராட்கோலி தனது டி20 கேப்டன்சியில் இருந்து விலகுகிறார்.
அபுதாபியில் நடைபெற்ற நியூசிலாந்து வென்றதன் மூலம் உலககோப்பை டி20 ஆட்டம் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்றைய வெற்றி மூலம் நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இதனால், உலககோப்பையில் ரன்ரேட் மூலம் அரையிறுதிக்குள் நுழையலாம் என்று இந்திய அணி போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.
இந்த நிலையில், சம்பிரதாயத்திற்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்தியா- நமீபியா ஆட்டம் குரூப் 2 பிரிவில் இன்று நடைபெற உள்ளது. இந்திய அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றிய இரு ஆட்டங்கள் நடைபெற்ற அதே துபாய் மைதானத்தில்தான் இன்றைய ஆட்டம் நடைபெற உள்ளது.
இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. நமீபியாவுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என்று அனைத்திலும் பலமான அணியாகவே உள்ளது. ஆனால், முழு பலத்தையும் நமீபியா மீது காட்டி தொடரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதே உண்மை. இதனால், பயிற்சி ஆட்டம் போன்றே நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் இந்திய அணியினர் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க வாய்ப்பு உள்ளது.
இஷான்கிஷானுக்கு மீண்டும் ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படலாம். இதுவரை களமிறங்காத ராகுல் சஹாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். மேலும், ரிசர்வ்ட் வீரர்களாக உள்ள ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் படேல் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை.
இந்திய கேப்டன் விராட்கோலி இந்த தொடருக்கு முன்னதாக, டி20 உலககோப்பையுடன் டி20 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால், டி20 ஆட்டங்களில் கேப்டனாக கோலி இன்று தனது கடைசி போட்டியில் களமிறங்க உள்ளார். இந்திய ரசிகர்கள் விராட்கோலிக்கு உணர்ச்சிப்பூர்வமான முறையில் வாழ்த்துக்ளை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். இதனால், கோலியை வெற்றியுடன் கேப்டன்சியில் இருந்து விடைபெறச் செய்ய வேண்டும் என்று இந்திய வீரர்களும் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்ப்படுகிறது.
நமீபியா அணி தகுதிச்சுற்று போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடி சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது. இதனால், அவர்கள் சூப்பர் 12 சுற்றில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நமீபியா அணி ஸ்காட்லாந்து அணியை மட்டுமே வென்றது. மற்ற ஆட்டங்களில் பெரியளவு போராட்டம் இன்றியே தோல்வியுற்றது. மற்றவகையில் வளர்ந்து வரும் நமீபியாவின் ஆட்டம் பாராட்டும் வகையிலே அமைந்துள்ளது.
இந்தியா- நமீபியா ஆட்டத்துடன் உலககோப்பை சூப்பர் 12 சுற்றின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த போட்டியுடன் உலககோப்பை தொடரில் குரூப் 1-ல் தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், குரூப் 2-ல் இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் வெளியேறுகிறது. அரையிறுதியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து – இங்கிலாந்து மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்