Suryakumar Yadav: வாழ்வில் மறக்க முடியாத 2 போட்டிகள் எது..? மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்..!
சூர்யகுமார்யாதவ் தான் விளையாடிய போட்டிகளிலே மறக்க முடியாத இரண்டு போட்டிகள் எது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு டி20 கிரிக்கெட் உலகில் பேட்டிங்கில் நம்பர் 1 வீரராக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக தற்போது வலம் வருகிறார். இந்த நிலையில், சூர்யகுமார்யாதவ் இந்திய அணியில் இடம்பிடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், பிரபல கிரிக்கெட் தொலைக்காட்சி 25 கேள்விகளை சூர்யகுமார் யாதவிடம் கேட்டது. அதற்கு, சூர்யகுமார்யாதவ் தனது பதில்களை அளித்தார். அந்த கேள்வியில், சூர்யகுமார் யாதவிடம் தங்களது மறக்க முடியாத இரண்டு போட்டிகள் எது தெரியுமா..? என்று கேட்டனர்.
அதற்கு சூர்யகுமார்யாதவ் கூறியதாவது,” நான் பேட்டிங்கில் அறிமுகமான போட்டி மறக்க முடியாதது. அந்த போட்டியிலே அரைசதம் அடித்தேன். அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். அந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றொரு போட்டி 2019ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குவாலிபயர் 1-ல் ஆடிய ஆட்டம் ஆகும்.
அந்த போட்டியில் 130 முதல் 135 ரன்கள் டார்கெட் என்று நினைக்கிறோம். மிகவும் கடினமான அந்த போட்டியில் நான் ஆட்டமிழக்காமல் 70 ரன்களை எடுத்தேன். அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதனால், அந்த போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த இன்னிங்சை நான் மீண்டும், மீண்டும் பார்ப்பேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக மட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கு சூர்யகுமார் யாதவின் பங்கு அளப்பரியது.அந்த சீசனில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 480 ரன்களை விளாசினார்.
மேலும், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 சீரிசில் மூன்றாவது போட்டியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், அவர் அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிட்டியது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் களமிறங்கிய முதல் போட்டியிலே 31 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்களை விளாசினார்.
சூர்யகுமார் யாதவ் இதுவரை 42 டி20 போட்டிகளில் ஆடி 12 அரைசதங்கள், 2 சதங்களுடன் 1408 ரன்களை குவித்துள்ளார். 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 378 ரன்களை விளாசியுள்ளார். 123 ஐ.பி.எல். போட்டிகளில் 16 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 644 ரன்களை விளாசியுள்ளார்.
மேலும் படிக்க:2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் பலவீனம் இதுதான்? - சரமாரியாக விமர்சித்த முன்னாள் வீரர்!
மேலும் படிக்க: Ruturaj Gaikwad: 7 சிக்ஸர்களுடன் ருத்ர தாண்டவமாடிய ருதுராஜ் கெய்க்வாட் முறியடித்த சாதனைகள்..!