Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பையை பச்சைக் குத்தி கொள்ள போகிறேன் என்று சூர்யகுமாய் யாதவ் கூறியுள்ளார்.
சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி:
தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
தற்போது இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருக்கிறது. முன்னதாக இந்திய அணி இன்று நாடு திரும்ப இருந்தது. ஆனால் அங்கு நிலவி வரும் கடும் சூறாவளியால் விமானங்கள் இயக்கப்படவில்லை. இதனால் நாளை இந்திய அணி நாடும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
பச்சைக் குத்திக்கொள்வேன்:
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவர் எப்படி முக்கியாமனதாக இருந்ததோ , அதைப்போலவே சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்சும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து உணர்ச்சி பொங்க சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”நான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பையை பச்சைக் குத்தி கொள்ள போகிறேன்.
நான் அதை முன்பே திட்டமிட்டு இருந்தேன். 2023 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு அருமையான தருணம். ஜூன் 29 எனது தங்கையின் பிறந்த நாள் வேறு. நான் தற்போது பச்சைக் குத்திக்கொள்வது அவருக்கும் ஒரு பிறந்த நாள் பரிசாக அமையும். அதோடு இந்த நாள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நாள் ” என்றார்.
மனதிற்கு நெருக்கமானது:
அப்போது அவரிடம் எந்த இடத்தில் பச்சைக் குத்திக் கொள்ள போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ்,”உலகக் கோப்பையை வென்றது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இதைப் பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் உள்ளது. உலகக் கோப்பையை வென்ற நாளை நான் எனது நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.