”கம்பீர் கைகாட்டினால் எதையும் செய்வேன்” துபேவையும் இறக்குனதும் அவர் தான்.. மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்
கம்பீரின் ஆலோசனைகள் மீது தன்னிடம் முழு நம்பிக்கை உள்ளதாகவும், அவர் காட்டும் சைகைகளை எந்த தயக்கமுமின்றி பின்பற்றுவதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் கொண்டிருக்கும் உறவைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். கம்பீரின் ஆலோசனைகள் மீது தன்னிடம் முழு நம்பிக்கை உள்ளதாகவும், அவர் காட்டும் சைகைகளை எந்த தயக்கமுமின்றி பின்பற்றுவதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.
கம்பீருடன் உள்ள பிணைப்பு
“ஒவ்வொரு ஓவர், இரண்டு ஓவர், மூன்று ஓவருக்கு ஒருமுறை நான் டக்-அவுட் பக்கம் பார்ப்பேன். அப்போது அவர் (கம்பீர்) என்னை நோக்கி சைகை செய்வார். வெளியில் இருந்து பார்த்தால் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமாகத் தெரியும். நான் மைதானத்தில் நிற்கும் போது யாரை பந்துவீச வைக்கலாம், பீல்டிங் அமைப்பை எப்படி வைக்கலாம் என்று பல விஷயங்கள் மனதில் ஓடும். ஆனால் அவர் எதையாவது சைகை செய்துவிட்டால், நான் அதை எந்த சந்தேகமுமின்றி உடனே பின்பற்றிவிடுவேன்,” என்று சூர்யா கூறினார்.
துபேவை நம்பிய கம்பீர்
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்ட்யா இல்லாத சூழலில், சிவம் துபேவைப் பொறுப்புடன் களமிறக்கியதை சூர்யா நினைவுகூர்ந்து பேசிய
“நாங்கள் ஹார்திக்கை இழந்துவிட்டோம். அவர் ஆட முயன்றார், ஆனால் முடியவில்லை. அப்போது நமக்கு ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்பட்டது. அப்போது கம்பீர், ‘சிவம் துபே இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார், நான் முழுமையாக நம்புகிறேன்’ என்றார். நான், ‘உங்களுக்கு நிச்சயமா?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். அப்படியே அவரை பந்துவீச வைப்போம், பொறுப்பை அவருக்கே கொடுப்போம் என்று முடிவெடுத்தோம். அவர் மைதானத்தில் வந்து அதைப் பூரணமாகச் செய்தார்,” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஹார்திக் பாண்ட்யா காயமடைந்ததால் இறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை. அந்த நேரத்தில் சிவம் துபே பந்து வீச்சைத் தொடங்கி, இந்தியாவிற்கு தேவையான நிலைத்தன்மையை வழங்கினார்.
அதேபோல், பேட்டிங்கில் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து, திலக் வர்மாவின் அசத்தலான ஆட்டத்துடன் சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார். இதன் காரணமாக, அவர் “போட்டியின் கேம் சேஞ்சர்” விருதைப் பெற்றார்.





















