Stuart Broad 600th Wicket: 600 விக்கெட்டுகள்... டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்... வரலாறு படைத்த ஸ்டூவர்ட் பிராட்..!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 600 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார்.
புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 3வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்றது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. ஓல்ட் ட்ராபோர்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்களை எடுத்துள்ளது.
600 விக்கெட்டுகள்:
இங்கிலாந்து அணிக்காக கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட், மொயின் அலி தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராட் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ட்ராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய போது ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600வது விக்கெட்டை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது இங்கிலாந்து வீரர் என்ற அரிய சாதனையை அவர் படைத்துள்ளார். பிராட் இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 306 இன்னிங்சில் பந்துவீசி 600 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கைப்பற்றியதும், ஒரு போட்டியில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியதுமே அவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
மிரட்டும் பிராட்:
இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் தன்வசம் வைத்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை முத்தையா முரளிதரன் வைத்துள்ளார். அவர் 133 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 800 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும், ஆண்டர்சன் 688 விக்கெட்டுகளையும், கும்ப்ளே 619 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். தற்போது, சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் பட்டியலில் 5வது இடத்தில் பிராட் உள்ளார். 600 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர், டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனைகளை தன்வசம் வைத்திருந்தாலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளராக ஸ்டூவர்ட் பிராட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் பிராட் ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 65 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2016க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலும், 2014ம் ஆண்டுக்கு பிறகு டி20 போட்டிகளிலும் அவர் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ICC Test Rankings: டாப் 10-க்குள் நுழைந்த ரோஹித் சர்மா.. அஷ்வின் தொடர்ந்து முதலிடம்.. வெளியான டெஸ்ட் தரவரிசை பட்டியல்!
மேலும் படிக்க: India A vs Pakistan A: சதம் விளாசி அசத்திய சாய் சுதர்சன்.. பாகிஸ்தான் ஏ அணியை பந்தாடி இந்தியா ஏ அணி வெற்றி!