அபார சதம் விளாசிய ரோகன்.. எதிரணியை பயமுறுத்திய ரியான்பராக்.. தியோதர் டிராபியை வென்ற தென்மண்டலம்..!
பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த தியோதர் டிராபி தொடரை தெற்கு மண்டல அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் அசத்திய பல இளம் வீரர்களும், முன்னணி வீரர்களும் பங்கேற்ற தியோதர் டிராபி தொடர் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று புதுச்சேரியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் தெற்கு மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோதின.
ரோகன் குன்னுமால் சதம்:
டாஸ் வென்ற தெற்கு மண்டல கேப்டன் மயங்க் அகர்வால் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய குன்னுமால் – மயங்க் அகர்வால் ஜோடி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். குறிப்பாக குன்னுமால் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். அவருக்கு மயங்க் அகர்வால் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
அபாரமாக பேட்டிங் செய்த குன்னுமால் சதம் விளாசி அசத்தினார். அணியின் ஸ்கோர் 181 ரன்களை எட்டியபோது குன்னுமால் ஆட்டமிழந்தார். அவர் 75 பந்துகளில் 11 பவுண்டரி 4 சிக்ஸருடன் 107 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் பொறுப்பாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் மயங்க் அகர்வால் 83 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர்களது ஆட்டத்திற்கு பிறகு தெற்கு மண்டல அணியின் ரன்கள் குறையத் தொடங்கியது.
329 ரன்கள் இலக்கு:
கடந்த போட்டியில் சதமடித்த சாய் சுதர்சன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், தமிழக வீரர் ஜெகதீசன் மட்டும் பொறுப்புடன் ஆடினார். அவர் 60 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் 7வது விக்கெட்டாக வெளியேறினார். கடைசியில் தெற்கு மண்டல அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் விளாசியது.
329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கிழக்கு மண்டல அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் அபிமன்யு 1 ரன்னிலும், விராட் சிங் 6 ரன்னிலும், உத்கர்ஷ் சிங் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணிக்கு கேப்டன் சவ்ரப் திவாரி – சுதிப்குமார் ஜோடி ஓரளவு ரன்களை சேர்த்தது. பொறுமையாக ஆடிய கேப்டன் சவுரப் திவாரி 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடிய சுதிப்குமாரும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
115 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற மோசமான நிலையில் இருந்த கிழக்கு மண்டல அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ரியான் பராக் மின்னல் வேகத்தில் ரன்களை சேர்த்தார். நாலாபுறமும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய ரியான் பராக்கால் கிழக்கு மண்டல ரன் ஜெட் வேகத்தில் எகிறியது.
தெற்கு மண்டலம் சாம்பியன்:
ஆட்டத்தை கிழக்கு மண்டலத்தின் பக்கம் கொண்டு வந்த நேரத்தில் ரியான் பராக் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 65 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசிய நிலையில் 95 ரன்களுடன் வெளியேறினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளித்த குமாரும் பேட்டிங்கால் அதிரடி காட்டியதால் அவர் ஆட்டமிழந்த பிறகும் கிழக்கு மண்டலம் தெற்கு மண்டலத்திற்கு பயம் காட்டிக் கொண்டே இருந்தது.
தெற்கு மண்டலத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த குமா் 58 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்பு எஞ்சிய விக்கெட்டுகள் சரிய 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 283 ரன்களுக்கு கிழக்கு மண்டலம் இழந்தது. இதனால், 45 ரன்கள் வித்தியாசத்தில் தெற்கு மண்டலம் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். போலவே இந்த தொடரிலும் பல இளம் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.