Shubman Gill Century: சர்வதேச போட்டிகளில் முதல் சதம் கடந்த சுப்மன் கில்... ஜிம்பாவே அணிக்கு 290 ரன்கள் இலக்கு..
ஜிம்பாவே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் சதம் கடந்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று ஜிம்பாவே அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்யுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் 41 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் கே.எல்.ராகுல் 46 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது பிராட் எவன்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சுப்மன் கில் தவான் உடன் இணைந்து ரன்களை சேர்க்க தொடங்கினார். ஷிகர் தவான் 68 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதனால் இந்திய 21 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.
A brilliant CENTURY for @ShubmanGill 👏👏
— BCCI (@BCCI) August 22, 2022
His maiden 💯 in international cricket.
Well played, Shubman 💪💪#ZIMvIND pic.twitter.com/98WG22gpxV
அப்போது ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 3வது விக்கெட்டிற்கு 140 ரன்கள் சேர்த்து அசத்தினர். இதில் சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அரைசதம் கடந்து 61 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த தீபக் ஹூடா ஒரு ரன்னிலும், சஞ்சு சாம்சன் 15 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அக்சர் பட்டேல் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
இறுதி கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து கொண்டு வந்தது. சதம் கடந்திருந்த சுப்மன் கில் 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசி 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. ஜிம்பாவே அணிக்கு 290 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இந்திய அணி ஏற்கெனவே முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வெற்றி பெற்றுள்ளதால் இந்தப் போட்டியை வென்று சாதனைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்திய அணி ஹாராரே மைதானத்தில் அதிகபட்சமாக 11 போட்டிகளை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அது 12வது வெற்றியாக அமைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.