Team India Squad: ஷ்ரேயாஸ் ஐயர் முதல் நடராஜன் வரை.. ஜிம்பாப்வே அணியில் தேர்வு பெறாத தகுதியுள்ள வீரர்கள்..!
ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டி நடராஜன் வரை ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணியில் இடம் பெறத் தகுதியான ஆனால் தவறவிட்ட 5 வீரர்களை இங்கே பார்க்கலாம்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு நேற்று அறிவித்தது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், கில் தனது கேப்டன் பதவியை ஜிம்பாப்வேக்கு எதிராக தொடங்க இருக்கிறார்.
15 பேர் கொண்ட இந்திய அணியில் புதிதாக 5 இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தநிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டி நடராஜன் வரை ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணியில் இடம் பெறத் தகுதியான ஆனால் தவறவிட்ட 5 வீரர்களை இங்கே பார்க்கலாம்.
ஷ்ரேயாஸ் ஐயர்
ஜிம்பாப்வே தொடருக்கான டி 20 ஐ அணியின் கேப்டனாக நியமிக்க ஷ்ரேயாஸ் ஐயருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், அவருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். மேலும், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது டி20 ஐ அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே தொடர் முடிந்ததும் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதில், ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்ஷித் ராணா:
ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஹர்ஷித் ராணா. ஐபிஎல் 2024ல் 13 போட்டிகளில் விளையாடிய இவர், 19 விக்கெட்களை வீழ்த்திருந்தார். இந்த சூழலில் ஹர்ஷித் ராணா அணியில் இடம்பெறாததும் ஆச்சரியமாக உள்ளது.
வருண் சக்கரவர்த்தி:
வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புகள் அமைந்தது. ஆனால், எதன் காரணமாக வருண் சக்கரவர்த்தியை இந்திய அணியின் தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என்பது தெரியவில்லை. கொல்கத்தா அணிக்காக இந்த சீசனில் 21 விக்கெட்களை எடுத்திருந்த இவர், ஒட்டுமொத்த ஐபிஎல் 2024ல் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார்.
யுஸ்வேந்திர சாஹல்:
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், யுஸ்வேந்திர சாஹலுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், ஜிம்பாப்வே தொடரில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.
டி நடராஜன்:
ஐபிஎல் 2024 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய டி நடராஜன் 14 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக இவர், டி20 உலகக் கோப்பை 2024ல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் இவர் 15 பேர் கொண்ட அணியில் கூட இடம்பெறசில்லை.
நடராஜன் இந்திய அணிக்காக கடைசியாக 2021ம் ஆண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய டி20 அணி:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகீல் அகமது , துஷார் தேஷ்பாண்டே.