Happy Birthday Cricketers: 5 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிறந்தநாள் இன்று.. யார் அவர்கள்..? சாதனைகள் என்னென்ன?
ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, கருண் நாயர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் ஆகியோரின் பிறந்தநாளும் இன்று.
இன்று அதாவது டிசம்பர் 6ம் தேதி, இந்தியாவின் மொத்தம் 5 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அதேபோல், உலக கிரிக்கெட்டில் 11 வீரர்களுக்கு இன்று பிறந்தநாள். ஆனால், அந்த பதினொன்றில் 5 இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, கருண் நாயர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் ஆகியோரின் பிறந்தநாளும் இன்று. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இன்று தங்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களின் வயது மற்றும் சர்வதேச சாதனைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஷ்ரேயாஸ் ஐயர்:
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் இன்று 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் 44.40 சராசரியில் 666 ரன்களையும், 58 ஒருநாள் போட்டிகளில் 49.59 சராசரியில் 2331 ரன்களையும், 51 டி20 போட்டிகளில் 30.66 என்ற சராசரியில் 1104 ரன்களையும் எடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பையில் அற்புதமாக பேட்டிங் செய்து அசத்தினார். மேலும் 4-வது இடத்தில் விளையாடும் போது உலகக் கோப்பையில் 500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ரவீந்திர ஜடேஜா:
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்று 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அணிக்காக ஜடேஜா கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதுவரை, ஜடேஜா இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 197 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடி, முறையே 2804 ரன்கள் மற்றும் 275 விக்கெட்டுகள், 2756 ரன்கள் மற்றும் 220 விக்கெட்டுகள், 457 ரன்கள் மற்றும் 51 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்று 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் இந்திய அணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். பும்ரா இதுவரை 30 டெஸ்ட், 89 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி, முறையே 128 விக்கெட்டுகளையும், 149 விக்கெட்டுகளையும், 74 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கருண் நாயர்:
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயருக்கு இன்று 32 வயதாகிறது. இவரும் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் இந்திய அணிக்காக அறிமுகமானார். அவர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62.33 என்ற சராசரியில் மொத்தம் 374 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு முச்சதம் அடங்கும். இதில் அதிசயம் என்னவென்றால் தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்தார். மேலும் வீரேந்திர சேவாக்கிற்குப் பிறகு முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், இந்திய அணிக்கான 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இப்போது கருண் நாயர் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்க போராடி வருகிறார்.
ஆர்.பி.சிங்:
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆர்.பி.சிங்கிற்கு இன்று 38 வயதாகிறது. அவர் செப்டம்பர் 2005 இல் சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஆர்.பி.சிங் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 14 டெஸ்ட், 58 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் முறையே 40, 69 மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை சாம்பியன் ஆக்குவதில் ஆர்.பி.சிங் பந்து வீச்சில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.