Jay Shah:"நான் தான் காரணம்" ஆனாலும் ஜெய்ஷா ரொம்ப ஸ்டிரிக்ட்!
நான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் துலீப் டிராபியில் விளையாடுகின்றனர் என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
என்னுடைய முடிவு தான்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீக்கியது. இதனால் ரஞ்சி டிராபியில் மும்பைக்கு எதிரான அரையிறுதி போட்டியை ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கஒட்ணித்தார். அதேபோல் இஷான் கிஷனும் உள் நாட்டில் நடைபெற்ற எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. அவர்களின் இந்த செயல்பாடு பிசிசிஐ அதிகாரிகளையும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரையும் கோபப்படுத்தியது. இச்சூழலில் தான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இரு வீரர்களையும் மத்திய ஒப்பந்ததில் இருந்து நீக்கியது என்னுடைய முடிவுதான் என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள துலீப் டிராபிக்கு அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால், கடுமையான நடவடிக்கைகள் வேண்டும் என்று நினைத்ததாக கூறியிருக்கிறார். எந்தவொரு வீரரும் காயமடைந்து டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறினால், தேசிய அணியில் விளையாடுவதற்கு முன்பு அவர்கள் மீண்டும் உள்நாட்டு சுற்றுகளில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதாவது, "துலீப் டிராபி அணியைப் பார்த்தால், ரோஹித் மற்றும் விராட் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் விளையாடப் போகிறார்கள். நான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துலீப் டிராபியில் விளையாடுகிறார்கள்.
நாங்கள் கொஞ்சம் கண்டிப்புடன் இருந்தோம். ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்தபோது, நான்தான் அவரை அழைத்து உள்நாட்டு ஆட்டத்தில் விளையாடச் சொன்னேன். காயம் அடைந்து வெளியே சென்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் உடற்தகுதியை நிரூபித்த பிறகே இந்திய அணிக்குள் வர முடியும் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடச் சொல்லி விராட் மற்றும் ரோஹித்தின் சுமையை அதிகரிப்பதில் அர்த்தமில்லை. அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
அவர்கள் வேலையாட்கள் கிடையாது:
நீங்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவையும் பார்க்க வேண்டும். அவர்களின் முன்னணி வீரர்கள் யாரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. நாங்கள் எங்கள் வீரர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும், அவர்களை வேலையாட்களைப் போல நடத்தக்கூடாது, என்று ஜெய்ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.