Shaheen Afridi: ஆசிய கோப்பையில் இருந்து கழட்டிவிடப்பட்ட பாகிஸ்தான் புயல்!
Shaheen Afridi; பாகிஸ்தான் அணியின் இளம் மற்றும் நம்பிக்கை நட்சத்திர பந்துவீச்சாளராக வலம் வருபவர் ஷாகின் ஷா அப்ரிடிக்கு ஆசிய கோப்பையில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் இளம் மற்றும் நம்பிக்கை நட்சத்திர பந்துவீச்சாளராக வலம் வருபவர் ஷாகின் ஷா அப்ரிடி. கடந்தாண்டு நடைபெற்ற உலககோப்பை டி20 போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர். இவருக்கு ஆகஸ்ட் 28ல் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை போட்டி தொடரில் இருந்து அணி நிர்வாகத்தால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஷாகின் ஷா அப்ரிடி பெயர் இல்லை. இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவான முடிவாக இருந்தாலும், அணி நிர்வாகம் உலக கோப்பை போட்டியை மனதில் வைத்துக் கொண்டு ஷாகின் ஷா அப்ரிடிக்கு ஓய்வு அளித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஷாகின் ஷா அப்ரிடி மிகவும் முக்கியமான வீரர். அதாவது ஒவ்வொரு அணியிலும் இருக்ககூடிய நம்பிக்கை நட்சத்திரம். உலககோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அவரது பந்து வீச்சை இந்திய அணி எப்போதும் மறக்காது. ஷாகின் ஷா அப்ரிடி தனியார் விளையாட்டு இணையதளத்திற்கு ஏற்கனவே அளித்திருந்த பேட்டியில், “இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலியை ஹாட்ரிக் விக்கெட் செய்ய வேண்டும் என்பதே எனது கனவு” என்று கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சற்றே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணி தனது பலத்தை கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையில் நிரூபித்தது. அதற்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம் என்றாலும், ஷாகின் ஷா அப்ரிடி ஒரு சிறப்பு காரணம்.
BREAKING: Shaheen Afridi has been ruled out of the 2022 Asia Cup.
— ICC (@ICC) August 20, 2022
Details ⬇️
பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லாவிட்டாலும் அவர்கள் ஆடிய விதத்தை அனைவரும் பாராட்டினர். குறிப்பாக, உலககோப்பை வரலாற்றில் இந்தியாவை வென்றதே கிடையாது என்ற வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி புதிய சகாப்தம் படைத்தது. அந்த போட்டியில் 151 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 18வது ஓவரிலே எட்டி பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் ரோகித்சர்மா ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் டக் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கே.எல்.ராகுல் 3 ரன்களில் ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரையும் அவர் ஆட்டமிழக்கச் செய்த விதம் இந்திய வீரர்களையும், இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய அணிக்காக தனி ஆளாக போராடிய விராட்கோலியையும் 19வது ஓவரில் கோலி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாகின்ஷா அவுட்டாக்கினார்.
ஆசிய கோப்பையில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஓய்வு இந்திய அணிக்கு ஒரு நிம்மதியான செய்தியாக உள்ளது. ஷாகின் ஷா அப்ரிடி இதுவரை 25 டெஸ்ட் போட்டிகள் 32 ஒருநாள் போட்டிகள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், டெஸ்ட்டில் 99 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.