IND vs SA: ‛இந்த டீமுக்கு என்ன தான் ஆச்சு... வெளிநாட்டில் சொதப்புவதும்... உள்நாட்டில் பாய்வதும்...’ சுதாரிப்பது எப்போது?
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றனர். இதனால் மூன்று போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமான தோல்வி அடைந்தது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் 7ஆவது முறை டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து வெளிநாட்டி டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் போட்டியை வெல்ல இந்திய பந்துவீச்சாளர்களே காரணமாக உள்ளனர். இந்திய அணி தோல்விக்கு பேட்டிங் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்திய பேட்டிங்கில் உள்ள முக்கிய குறைபாடுகள்:
தொடர்ந்து சொதப்பும் மிடில் ஆர்டர்:
ஒரு அணியின் முக்கியமான பலமே அதன் மிடில் ஆர்டர் தான். ஆனால் இந்தியாவிற்கு அந்த மிடில் ஆர்டர் மிகவும் சொதப்பும் வகையில் அமைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் களத்தில் தாக்கு பிடிக்கவே மிகவும் தடுமாறுகின்றனர். குறிப்பாக புஜாரா,ரஹானே, கோலி, ரிஷப் பண்ட் ஆகிய நான்கு பேரும் ஏதாவது ஒரு போட்டியில் மட்டும் ரன்கள் அடிக்கின்றனர். மற்ற போட்டிகளில் அவர்கள் சொதப்பும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. இதற்கு இந்த தென்னாப்பிரிக்க தொடரும் ஒரு முக்கியமான சான்றாக அமைந்துள்ளது. நடப்பு தொடரில் இந்திய அணி விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறை மட்டுமே 300 ரன்களை கடந்துள்ளது. 4 முறை 250 ரன்களுக்கும் குறைவாக இந்திய அணி அடித்துள்ளது. இது அணியின் வெற்றி வாய்ப்பை முக்கியமாக தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
தொடர்ச்சியாக விக்கெட் வீழ்ச்சி:
இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
73/8 vs நியூசிலாந்து(கிறிஸ்ட்சர்ச் 2020)
36/9 vs ஆஸ்திரேலியா(அடிலெய்டு 2020)
68/6 vs நியூசிலாந்து(சவுதாம்ப்டன் 2021)
22/7 மற்றும் 63/8 vs இங்கிலாந்து (லீட்ஸ் 2021)
55/7 vs தென்னாப்பிரிக்கா(செஞ்சுரியன் 2021)
இப்படி தொடர்ச்சியாக மிகவும் குறைவான ரன்களை எடுப்பதற்குள் இந்திய அணி அதிகளவில் விக்கெட்டை இழந்து மோசமான ஸ்கோரை அடித்து வருகிறது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்துள்ளது. இந்த பேட்டிங் சரிவு இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கு பெரிய முட்டுக்கட்டை போடும் வகையில் அமைந்துள்ளது.
இந்திய டெயில் எண்டர்களின் பேட்டிங்:
இந்திய டெயில் எண்டர்களின் பேட்டிங்கும் மிகவும் மோசமாக அமைந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவின் 8 முதல் 11 வரிசை வீரர்கள் பேட்டிங்கில் ரன் சராசரி 13.53 ஆக உள்ளது. இவற்றில் அஸ்வின் மட்டும் 8ஆவது வீரராக களமிறங்கி 516 ரன்கள் அடித்து நல்ல சராசரியை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய டெயில் எண்டர்கள் மிகவும் விரைவாக தொடர்ந்து அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்டமிழந்துள்ளனர். 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியின் டெயில் எண்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் பிரச்னை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: `பேட்டிங் குறைபாடுகளில் இருந்து தப்பிக்கும் எண்ணம் இல்லை!’ - தோல்விக்குப் பிறகு விராட் கோலி பேட்டி!