SA vs NZ Innings Highlights: டி காக் - வான்டெர் டு சென் அதிரடி... இமாலய இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்க அணி 358 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்கா- நியூசிலாந்து மோதல்:
இதுவரை விளையாடி உள்ள 6 போட்டிகளில் 5 வெற்றி 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியும், 4 போட்டிகளில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வி என புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் விளையாடி வருகின்றன. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
சிறப்பான பார்ட்னர்ஷிப்:
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர் குயின் டி காக் அதிரடியாக விளையாடினார். முன்னதாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அந்த அணியின் கேப்டன், தேம்பா பாவுமா 28 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய வான்டெர் டு சென் மற்றும் குயின் டி காக் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்து அணியினரின் பந்து வீச்சை பறக்க விட்டனர்.
முதல் விக்கெட்டை 8. 3-வது ஓவரில் எடுத்த நியூசிலாந்து அணிக்கு 2 வது விக்கெட்டை கைப்பற்ற 30 ஒவர்கள் தேவைப்பட்டது.
அதன்படி 40 ஓவர்கள் வரை களத்தில் நின்ற குயின் டி காக் 116 பந்துகளில், 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 114 ரன்கள் குவித்தார். மேலும், இன்றைய போட்டியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் 500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வான்டெர் டு சென் அபாரம்:
அதேபோல், மறுபுறம் வான்டெர் டு சென் கடைசி வரை அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 118 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 133 ரன்கள் எடுத்தார். இதனிடையே, நியூசிலாந்து பந்து வீச்சாளர் டிம் சவுத்தி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், வந்த ஹென்ரிச் கிளாசென் ஏற்கனவே களத்தில் நின்ற டேவிட் மில்லருடன் இணைந்தார். அந்த அகையில் டேவில் மில்லர் 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 53 ரன்கள் எடுத்தார்.
இவ்வாறாக அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.
மேலும் படிக்க: Quinton De Kock Century: ஒரே உலகக் கோப்பையில் 4 சதம்! புதிய வரலாறு படைத்த டி காக்!