SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
SA Vs NEP, T20 Worldcup: ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாப்ரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தென்னாப்ரிக்கா த்ரில் வெற்றி:
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 114 ரன்களை மட்டுமே எடுத்து, வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
ஐசிசி டி-20 உலகக் கோப்பை:
ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் டி-பிரிவைச் சேர்ந்த தென்னாப்ரிக்கா மற்றும் நேபாளம் அணிகள் மோதின.
பந்துவீச்சில் மிரட்டிய நேபாளம்:
மேற்கிந்திய தீவுகளில் உள்ள அர்னோஸ் வாலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியில் டி காக் 10 ரன்களிலும், மர்க்ரம் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். நேபாள பந்துவீச்சாளர்கள் ரன்களை விட்டுக்கொடுக்காமல் மிகவும் சிக்கனமாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஓரளவிற்கு தாக்குப்பிடித்த ஹென்றிக்ஸ் 49 பந்துகளில் 43 ரன்களையும், ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 27 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. நேபாளம் சார்பில் குஷால் புர்டெல் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், திபேந்திர சிங் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினர்.
தென்னாப்ரிக்காவிற்கு ஷாக்:
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணியில், குஷல் 13 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ரோகித் ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் மிக சொற்ப ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆஷிப் ஷேக் நிலைத்து நின்று ஆடி 42 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக அனில் குமாரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 ரன்கள் எடுத்தார். இதனால், 19 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்தது.
கடைசி ஓவரில் திக்..திக்..!
கடைசி ஓவரில் நேபாளம் அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. பார்ட்மேன் வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் பவுண்டரியும், நான்காவது பந்தில் 2 ரன்களையும் குல்ஷான் சேர்த்தார். மீண்டும் 5வது பந்து டாட் பால் ஆனது. இதனால் கடைசி பந்தில் நேபாள அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. குல்ஷான் அந்த பந்தை தவறவிட்டபோதும் ரன் எடுக்க ஓடினார். ஆனால், விக்கெட் கீப்பர் டி காக் குல்ஷன் ஜாவை ரன் - அவுட்டாக்கினார். இதனால் தென்னாப்ரிக்கா அணி கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தென்னாப்ரிக்கா அணி விளையாடிய 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், நேபாளம் அணி மூன்று போட்டிகளில் விளையாடி 2 தோல்வி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.