Ruturaj Gaikwad | கேப்டனான ருதுராஜ்....! வாய்ப்பை பறிகொடுத்த கேதர் ஜாதவ்...!
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான மகாராஷ்ட்ரா அணிக்கான கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் முதன்முறையாக பொறுப்பேற்க உள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் ஜாம்பவனாக வலம் வரும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. நடப்பு தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இந்தியாவில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியைப் போன்று சையத் முஷ்டாக் கோப்பையும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த கோப்பையில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்கும். இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் மும்பை அணி வீரர்களின் பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
மும்பை அணியில் பலருக்கும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 24 வயதே ஆன ருதுராஜ் 22 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 839 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 7 அரைசதங்கள் அடங்கும். நடப்பு ஐ.பி.எல். தொடரில் மட்டும் ஒரு சதத்துடன் 635 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பு வகிக்கும் மகாராஷ்ட்ரா அணிக்கு நௌஷத் சையக் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்ட்ரா அணியில் மூத்த வீரர் கேதர் ஜாதவ், யாஷ்நஹர், அஷீம்காசி, ரஞ்சித்நிகாம், சத்யஜித் பச்சவ், தரண்ஜித்சிங் தில்லோன், முகேஷ்சவுத்ரி, அஷய்பல்கார், மனோஜ் இங்லே, ப்ரதீப்தாதே, ஷம்சுஷாமா காசி, ஸ்வப்னில்புல்பகர், திவ்யங்க் ஹிங்கேநெகர், சுனில் யாதவ், தரண்ராஜ்சிங் பரதேசி, ஸ்வப்னில் குகலே, பவன்ஷா மற்றும் ஜெகதீஷ் ஜோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அனுபவம் மற்றும் வயது அடிப்படையில் இந்திய அணிக்காக ஆடிய கேதர் ஜாதவிற்கே கேப்டன் அல்லது துணைகேப்டன் பதவி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவரது மோசமான பார்ம் காரணமாக அவரை வீரராக மட்டுமே அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. கேதர் ஜாதவ் 2020ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியபோது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர். சென்னை அணியின் தோல்விக்கு கேதர் ஜாதவே காரணம் என்று சமூக வலைதளங்களில் அவரது பேட்டிங் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
இதையடுத்து, 2021ம் ஆண்டுக்கான சென்னை அணியில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டார். அவரை பின்னர் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. முதல்கட்ட ஐ.பி.எல். தொடரில் வாய்ப்பு பெற்ற கேதர்ஜாதவ் இரண்டாம் கட்ட ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணியும் அவரை ஆடும் வெலனில் களமிறக்கவில்லை.
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் மகாராஷ்ட்ரா அணி களமிறங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்