Mohammad Shami: ”ரூ.4 லட்சம் பத்தலை, மாசம் ரூ.10 லட்சம் வேண்டும்” - ஷமியின் முன்னாள் மனைவி, நீதிபதி கேட்ட கேள்வி
Mohammad Shami Wife: முகமது ஷமி மாதா மாதம் வழங்கும் ரூ.4 லட்சம் ஜீவானாம்சம் போதவில்லை என, அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Mohammad Shami Wife: முகமது ஷமி மாதா மாதம் வழங்கும் ரூ.4 லட்சம் ஜீவானாம்சத்தை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என, முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் கோரிக்கை வைத்துள்ளார்.
ஷமியின் முன்னாள் மனைவி வழக்கு:
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹான் உடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இடைக்கால பராமரிப்பு தொகையாக, மனைவிக்கு ரூ.1.5 லட்சம் மற்றும் மகளுக்கு ரூ.2.5 லட்சம் என மொத்தமாக மாதா மாதம் ரூ.4 லட்சம் வழங்க ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான், தனக்கு வழங்கப்படும் இடைக்கால பராமரிப்பு தொகை போதவில்லை எனவும், அதனை உயர்த்தி தரக்கோரியும் ஹசின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரூ.10 லட்சம் தர கோரிக்கை:
தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ”ஷமியின் 2021-22 வருமான வரி வருமானத்தின்படி அவரது ஆண்டு வருமானம் தோராயமாக ரூ.48 கோடி. ரேஞ்ச் ரோவர், ஜாகுவார், மெர்சிடிஸ் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் என ஆடம்பரமான வாகனங்களை பயன்படுத்தி வருகிறார். ஆனால், தான் அடிப்படை செலவுகளுக்கு கூட போராடி தாழ்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறேன். ஷமியின் நிதி நிலை மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்போது வழங்கப்படும் பராமரிப்புத் தொகை போதுமானதாக இல்லை. எனவே, எனக்கான பராமறிப்பிற்கு ரூ.7 லட்சம், எனது மகளுக்கான பராமரிப்பிற்காக ரூ,3 லட்சம் என மாதாமாதம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிகள் கேள்வி:
ஷமிக்கு எதிரான வழக்கு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அம்ர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மாதத்திற்கு ரூ.4 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை அல்லவா? அது உங்களுக்கு போதவில்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ஷமியின் சொத்து மதிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என ஹசின் ஜஹான் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த மனு தொடர்பாக அடுத்த 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என ஷமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விவாகரத்து வழக்கு
முகமது ஷமி மற்றும் ஹசின் ஜஹானுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து 2018ம் ஆண்டு குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாக, ஷமிக்கு எதிராக அவரது மனைவி புகார் அளித்தார். பின்னர் இடைக்கால பராமரிப்புக்காக ஹசின் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தை அணுகினார். ஆரம்பத்தில், விசாரணை நீதிமன்றம் குழந்தை பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.80,000 வழங்க ஷமிக்கு உத்தரவிட்டது, ஆனால் ஷமியின் மனைவிக்கு பராமரிப்பு தொகையை வழங்க மறுத்தது. இதையடுத்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்டப்பட்ட மேல்முறையீட்டில் குழந்தையின் தாய்க்கு ரூ.50,000 வழங்கி 2023 ஆம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 லட்சமும், மகளுக்கு ரூ.2.5 லட்சமும் மாதாந்திர பராமரிப்பு தொகையை வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனை எதிர்த்தே தற்போது ஹசின் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.




















