Rohit On WTC: ”டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3 போட்டி நடத்தலாமே” ரோகித் கோரிக்கை - ”ஒலிம்பிக்ல..” கம்மின்ஸ் தந்த பதிலடி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா கோரிக்கை வைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியா படுதோல்வி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. கோலியிடம் இருந்து இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை பெற்ற பிறகு, ரோகித் இரண்டு ஐசிசி தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். ஆனால், அதில் அவரால் வெற்றியை பெறமுடியவில்லை. இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
ஐபிஎல் காரணமா?
அப்போது, ஐபிஎல் தொடருக்கு பின் தொடர்வதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கையாள்வது கடினமாக உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் ”உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஏன் ஐபிஎல் தொடருக்கு பிறகு நடைபெறுகிறது? இது ஏன் மார்ச் மாதத்தில் நடைபெறக்கூடாது? ஜுன் மாதத்தில் தான் இறுதிப்போட்டியை விளையாட வேண்டுமா? இது ஆண்டின் எந்த நேரத்திலும், உலகில் எங்கும் விளையாடலாம், இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகில் எங்கும் விளையாடலாம்” என கூறினார்.
அடுத்து எப்படி?
அடுத்த தொடருக்கு எப்படி அணியை தயார் செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு “அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எங்கு விளையாடப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன். எங்கு விளையாடுகிறோம் என்பதைப் பொறுத்து, அதன் அடிப்படையில் நாங்கள் எந்த வகையான வீரர்களை தயார் செய்ய வேண்டும், எந்த வகையான வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம் என்றார்.
3 போட்டிகள் வேண்டும் - ரோகித்:
அதோடு “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். ஆனால், அதற்கான நேரம் இருக்குமா என்பது தான் கேள்வி?.. இதுபோன்ற பெரிய தொடர்களின் முடிவை அறிய இரு அணிகளுக்கும் சரியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என நம்புகிறேன்” என ரோகித் சர்மா தெரிவித்தார்.
கம்மின்ஸ் சொன்ன பதில்:
ரோகித்தின் கோரிக்கை தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”ரோகித்தின் கோரிக்கை நன்றாக உள்ளது, 50 ஓவர் போட்டிகளில் இதுபோன்று ஏற்கனவே இருக்கிறது. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே மெடல்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், ஆஸ்திரேலிய ஃபுட்பால் லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் நேஷனல் ரக்பி லீக் போன்றவற்றில், ஒன்றிற்கு மேற்பட்ட இறுதிப்போட்டிகளின் மூலம் தான் வெற்றியாளர்கள் உறுதி செய்யப்படுகின்றனர்” என கூறினார். ரோகித் மற்றும் கம்மின்ஸின் கருத்துகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.