இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க... ரவிசாஸ்திரி சொல்வது யாரை தெரியுமா?
நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் 14 போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய ஆடும் லெவன் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு இடம் தரக்கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்குப் பின் மீண்டும் சர்வதேச போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய அணியில் வலுவான பந்துவீச்சு இல்லாததது தான் என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு வரப்போகும் போட்டிகளில் அணியில் இடம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் 14 போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் காரணமாக உம்ரான் மாலிக்கிற்கு தென்னாப்பிரிக்கா தொடரில் இடம் கிடைத்தது. பயிற்சியின் போது மணிக்கு 163 கி.மீ. வேகத்தில் பந்து வீசி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை வியக்க வைத்ததாக தகவல் வெளியானது. ஆனால் முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் வந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதால் உம்ரான் மாலிக் உட்பட இளம் வீரர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அக்டோபரில் தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக உம்ரான் மாலிக்கை தயார் படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வரப்படும் நிலையில், அவருக்கு உலகக்கோப்பைக்கான ஆடும் லெவனில் இடம் கொடுக்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், உம்ரான் மாலிக் வளர்ந்து வரும் இளம் வீரர் என்பதால் அவரை சீனியர் வீரர்களுடன் வலைப்பயிற்சியில் பங்கேற்க விட்டு பயிற்சியெடுக்க ஊக்குவிக்க வேண்டும். அதேசமயம் அவர் முதலில் 50 ஓவர் போட்டி,பின்னர் டெஸ்ட் போட்டி என தயார் படுத்த வேண்டும்.
அதை விடுத்து 4 மாதங்களில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு அவசர அவசரமாக தயார் படுத்தக்கூடாது என கூறியுள்ளார். ரவி சாஸ்திரியின் இந்த கருத்து கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.