ரவி சாஸ்திரியின் பிறந்தநாள்… சச்சின் வெளியிட்ட அரிய புகைப்படம்… வைரலாகும் டிவிட்டர் பதிவு!
இளம் சச்சின் டெண்டல்கர் கிரிக்கெட் ஆடுகளத்தில் ரவி சாஸ்திரியுடன் பேசுவதுபோன்ற அந்த அரிய புகைப்படம் அனைவரையும் ரசிக்க வைத்தது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது 61வது பிறந்தநாளை நேற்று (மே 27, சனிக்கிழமை) கொண்டாடிய நிலையில், எல்லா தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அதோடு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து ரவி சாஸ்திரியுடனான தனது நேசத்துக்குரிய தருணங்களை நினைவுகூர்ந்து, தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
சச்சின் வெளியிட்ட புகைப்படம்
சமீபத்தில் நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படமாக இது மாறியது. ஏனெனில் இளம் சச்சின் டெண்டல்கர் கிரிக்கெட் ஆடுகளத்தில் ரவி சாஸ்திரியுடன் பேசுவது போன்ற அந்த அரிய புகைப்படம் அனைவரையும் ரசிக்க வைத்தது. இருவருமே மிகவும் சீரியசாக எதையோ பேசிக்கொண்டிருப்பது போல அதில் தெரிகிறது. சச்சின் கேமராவின் திசையை நோக்கிச் கையை காட்டி எதோ சொல்வதை காணமுடிகிறது. இருவரும் விளையாட்டின் நுட்பங்கள் பற்றி உரையாடலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பல ரசிகர்கள் கமெண்டில் யூகிக்கின்றனர்.
ட்விட்டர் பதிவு
ட்விட்டரில், சச்சின் அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "எனது ஸ்வாகான (swag) நண்பருக்கு, @RaviShastriOfc, பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் நாள் சிரிப்புடன், மகிழ்வுடனும், சிறக்கட்டும்!" ரவி சாஸ்திரி தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை டிசம்பர் 17, 1992 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். 1989 இல் கிரிக்கெட்டில் அறிமுகமான சச்சின் அவரோடு மூன்று ஆண்டுகளுக்கு சேர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் - ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி மேலும் இரண்டு ஆண்டுகள் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி, செப்டம்பர், 1994 இல் தனது ஓய்வை அறிவித்தார். சச்சின் மற்றும் சாஸ்திரி இருவரும் முதல்தர கிரிக்கெட்டில் மும்பைக்காக ஆடினர் என்பதால் இருவருக்குமான பிணைப்பு அதிகம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த சாதனையை சாஸ்திரி வைத்திருந்தார். அவரது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும், ரவி சாஸ்திரி ஏராளமான ரெக்கார்டுகளை உருவாக்கியுள்ளார், அவற்றில் பல ரெக்கார்டுகள், பல ஆண்டுகள் யாராலும் முறியடிக்கப்படாமல் அவர் வசம் இருந்தன.
Wishing my friend with a lot of swag, @RaviShastriOfc, a very happy birthday!
— Sachin Tendulkar (@sachin_rt) May 27, 2023
May your day be packed with laughter, fun & good times! pic.twitter.com/T6OBwjSE5x
ரவி சாஸ்திரியின் சாதனைகள்
முதல்தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார், மேலும், முதல்தர கிரிக்கெட்டில் குறைந்த நிமிடங்களில் அதிவேக இரட்டைச் சதம் அடித்தவரும் அவர்தான். பரோடாவுக்கு எதிராக வெறும் 113 நிமிடங்கள் மட்டுமே விளையாடி சாதனை படைத்தார். அதே போட்டியில், திலக் ராஜ் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து., சர் கேரி சோபர்ஸுக்குப் பிறகு, இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியராகவும், உலகின் இரண்டாவது வீரராகவும் ஆனார். முதல் தர கிரிக்கெட்டில் குறைந்த நிமிடங்களில் அதிவேக இரட்டைச் சதம் என்ற அவரது சாதனையை ஆப்கானிஸ்தானின் ஷஃபிகுல்லா ஷின்வாரி, 2017 ஆம் ஆண்டில்தான் முறியடித்தார். காபூல் பிராந்தியத்திற்கு எதிராக பூஸ்ட் பிராந்தியத்திற்காக விளையாடியபோது அவர் வெறும் 103 நிமிடங்களில் இரட்டை சதம் அடித்து அந்த சாதனையை முறியடித்தார்.