மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ரஹானே...! ரஞ்சி கோப்பையில் அசத்தல் சதம்...!
சவுராஷ்ட்ரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் சதமடித்து அஜிங்கிய ரஹானே மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணியின் முக்கிய வீரர் அஜிங்கிய ரஹானே. தனது பேட்டிங்காலும், அயராத உழைப்பாலும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு வரை உயர்ந்தவர். கோலி இல்லாதபோது இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி, ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். கடந்த சில மாதங்களாவே ரஹானேவின் பேட்டிங் பார்ம் சொதப்பியதால் அவரிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பை பி.சி.சி.ஐ. பறித்தது.
இந்த நிலையில், ரஹானே தனது பழைய பார்முக்கு திரும்பி தான் யார்? என்பதை பி.சி.சி.ஐ.க்கு நிரூபித்துள்ளார். அகமாதாபாத் மைதானத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணியும், சவுராஷ்ட்ரா அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக களமிறங்கிய ரஹானே பொறுப்புடனும், நிதானத்துடனும் ஆடினர்.
இதனால், தனது பழைய பேட்டிங் பார்முக்கு திரும்பிய ரஹானே சதமடித்து அசத்தினார். அவர் 212 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்ஸருடன் தனது சதத்தை நிறைவு செய்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் ரஹானே ஆட்டமிழக்காமல் 250 பந்துகளில் 108 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக சர்பராஸ் கான் 121 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் அடுத்த மாதம் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்தியாவில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில், ரஹானே மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
33 வயதான அஜிங்கிய ரஹானே 82 டெஸ்ட் போட்டியில் ஆடி 4 ஆயிரத்து 931 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 12 சதங்களும், 25 அரைசதங்களும் அடங்கும். 90 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 962 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 3 சதமும், 24 அரைசதங்களும் அடங்கும். 20 டி20 போட்டிகளில் ஆடி 375 ரன்களை குவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ள ரஹானே 151 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 941 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 2 சதமும், 28 அரைசதமும் அடங்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

