Watch Video: டிராவிட் மகன் அடித்த அந்த சிக்ஸ்! ஐ.பி.எல்.க்கு அஸ்திவாரமா? வீடியோவை பாருங்க
ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் கர்நாடகாவில் நடைபெற்று வரும் மகாராஜா டிராபியில் விளாசிய சிக்ஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமாக இருந்தவர் ராகுல் டிராவிட். இவரது மகன் சமித் டிராவிட். 18 வயதான சமித் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட சமித் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
டிராவிட் மகன் அடித்த சிக்ஸ்
இதையடுத்து, அவருக்கு கர்நாடகாவில் நடக்கும் மகாராஜா டிராபியில் ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக சமித் டிராவிட் களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் சிவமோகா லயன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய சமித் டிராவிட் அடித்த சிக்ஸர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rahul Dravid's son Samit in the KSCA Maharaja Trophy. 😍❤️pic.twitter.com/S3fqB8IUh0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 17, 2024
அச்சு அசலாக ராகுல் டிராவிட் போலவே கால்களை நகர்த்தி மிக அழகான சிக்ஸர் ஒன்றை சமித் விளாசினார். துரதிஷ்டவசமாக இந்த போட்டயில் அவர் 9 பந்துகளல் 1 சிக்ஸருடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஆனாலும், அவர் அடித்த சிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பது போல அவரது பேட்டிங் ஸ்டைல் இருந்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
அடுத்தடுத்து அசத்துவாரா?
18 வயதான சமித் இனி வரும் காலங்களில் தந்தையைப் போல ஜொலிப்பாரா? என்பதை அடுத்தடுத்து வரும் போட்டிகள் மூலம் அறிய முடியும். இந்த போட்டியில் முதலில் ஆடிய மைசூர் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வரிசை வீரர்கள் சொதப்ப, டெயிலண்டரான மனோஜ் 16 பந்துகளில் 4 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து இலக்கை நோக்கி சிவமோகா லயன்ஸ் அணி 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால், விஜேடி முறைப்படி மைசூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல்.க்கு வருவாரா?
இந்த தொடரில் பல அணிகள் பங்கேற்றுள்ளதாலும், செப்டம்பர் 1ம் தேதி வரை இந்த தொடர் நடப்பதாலும் சமித் டிராவிட் இந்த தொடரில் அசத்த அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினால் ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் அவர் எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.