Gurbaz: சதம் அடிக்காத விரக்தி! பேட்டால் நாற்காலியை தாக்கிய குர்பாஸ்... ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை..!
அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது 57 பந்துகளில் 80 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார்.
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இக்ராம் அலிகில் ஆகியோர் அரைசதம் விளாசி இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார்.
அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது 57 பந்துகளில் 80 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் ஏமாற்றமடைந்த குர்பாஸ் கோபமடைந்து, தனது பேட்டை வேகமாக தரையில் அடித்தார். பின்னர் தனது பேட்டால் எல்லைக் கோட்டிலுள்ள விளம்பரப் பலகையைத் தாக்கினார். முன்னோக்கி செல்லும் போது, அவர் சத்தமாக கத்தி, டக்அவுட் அருகே வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் தனது பேட் கொண்டு அடித்தார்.
பேட்டிங்கின்போது குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். அதில் அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்து, அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 க்கு மேல் இருந்தது. குர்பாஸ் ஆட்டமிழந்த பிறகு, ஆப்கானிஸ்தான் அணி சிக்கலில் சிக்கியது. அப்போது, இக்ரம் அலிகில் முஜீப் உர் ரஹ்மானுடன் இணைந்து இன்னிங்ஸைக் கையாண்டு 284 ரன்கள் என்ற இலக்கை கொண்டு சென்றார்.
அதன்பிறகு, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 40.3 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தநிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்மாஸ் அதிகாரப்பூர்வமாக கண்டிக்கப்பட்டுள்ளார்.
குர்பாஸ் ஐசிசி நடத்தை விதி 2.2 ஐ மீறியதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதில், “ ஒரு சர்வதேச போட்டியின்போது கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள் மற்றும் தரை உபரணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
குர்பாஸின் ஒழுங்காற்றுப் பதிவில் ஒரு டீமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. தனது சர்வதேச போட்டியில் முதல் குற்றமாகும். குர்பாஸும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே முறையான விசாரணை தேவையில்லை என எமிரேட்ஸ் ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ஜெஃப் குரோவ் தெரிவித்துள்ளார்.
Afghanistan's Rahmanullah Gurbaz Received Reprimand and found to breached ICC Code of Conduct, after he was seen to have slammed his bat on the boundary rope against England after being run out on 80 runs
— Shakeel Khan Khattak (@ShakeelktkKhan) October 17, 2023
#AFGvENG #AfghanAtalan pic.twitter.com/iW5ZSmaWgD
குர்பாஸ் அடுத்த போட்டியில் விளையாட தயாரா..?
லெவல் 1 மீறல்களுக்கு அதிகபட்சமாக போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அடுத்த 24 மாத காலத்திற்குள் ஒரு வீரர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டீமெரிட் புள்ளிகளை தடை செய்யப்படுவார்.
2 சஸ்பென்ஷன் புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாடாமல் தடை செய்யப்படுவார். எனவே, வரும் உலகக் கோப்பை போட்டியில் அவர் தாராளமாக விளையாடலாம்.