Rachin Ravindra Record: உலகக்கோப்பை தொடர்... சச்சின் சாதனையை முறியடித்த ரச்சின் - விவரம் இதோ!
சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்த சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று விட்டன. மேலும், நியூசிலாந்து அணியும் கிட்டத்தட்ட அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்று விட்டது.
அதேநேரம், இந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு விதமான சாதனைகள் ஒவ்வொரு போட்டியிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதேபோல், இதற்கு முன்னதாக, உலகக் கோப்பை தொடரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளும் முறியடிக்கப்பட்டு வருகிறது.
சச்சினை முறியடித்த ரச்சின்:
இன்று (நவம்பர் 9) நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா 34 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 42 ரன்கள் எடுத்தார்.
25 வயதிற்குள்:
இதன் மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் (Single Edition) 25 வயதை எட்டுவதற்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ர சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா. இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை 8 இன்னிங்ஸ்கள் விளையாடி 74.71 சராசரியில் 523 ரன்கள் எடுத்திருந்தார்.
இச்சூழலில் தான் இன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார். அதன்படி, ரச்சின் ரவீந்திரா மொத்தம் 565 ரன்கள் எடுத்திருக்கிறார். இது அவர் விளையாடிய உலகக் கோப்பை தொடரின் 9 வது இன்னிங்ஸில் நடந்துள்ளது. முன்னதாக கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 523 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 இன்னிங்ஸில் ரச்சின் செயல்பாடு:
ரச்சின் ரவீந்திரன் இந்த உலகக் கோப்பையில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார். அதில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 பந்துகள் களத்தில் நின்ற அவர் 15 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 123* ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 51 ரன் எடுத்தார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 75 ரன்களும் அடித்தார். மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சதம் விளாசினார் 89 பந்துகள் களத்தில் நின்ற அவர் 116 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 9 ரன்கள் எடுத்த அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 108 ரன்கள் குவித்தார். இன்று (நவம்பர் 9) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்களும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Pakistan Semi Final Chance: நியூசிலாந்து வெற்றி... இதை செய்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு
மேலும் படிக்க: NZ vs SL Match Highlights: 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல்; அரையிறுதிக்கு தகுதி பெற்றதா நியூசிலாந்து?