Varanasi Cricket Stadium : சிவனே அடிப்படை.. ரூ.451 கோடி செலவில், வாரணாசியில் பிரமாண்ட கிரிக்கெட் மைதானம்..
கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு வாரணாசியில் உலகத்தரத்திலான புதிய, கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது.
வாரணாசியில் கட்டப்பட உள்ள புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
வாரணாசியில் பிரதமர் மோடி:
நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார், அதன்படி, ஆயிரத்து 115 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைக்கிறார். அதோடு, 451 கோடி ரூபாய் செலவில் கட்டடப்பட உள்ள புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்ன்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த புதிய மைதானம் தொடர்பான அறிவிப்பு தான் கிரிக்கெட் ரசிகர்களிடயே தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவன் வடிவிலான கிரிக்கெட் மைதானம்:
இந்தியாவில் உள்ள மற்ற கிரிக்கெட் மைதானங்களை போன்று அல்லாமல், வடிவமைப்பு அடிப்படையிலேயே மிகவும் புதுமையானதாக இருப்பதன் காரணமாக தான் வாரணாசி மைதானம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது இறைவன் சிவனை அடிப்படையாக கொண்டு இந்த மைதானம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியின் கஞ்சாரி பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய மைதானம் உருவாக உள்ளது. ஏற்கனவே, காசியில் 108 ருத்ராக்ஷ் மணிகள் கொண்ட சிவலிங்க வடிவில் கட்டப்பட்ட, ருத்ராக்ஷ் சர்வதேச மாநாட்டு மையத்தில் தான் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
மைதானத்தின் வடிவமைப்பு விவரங்கள்:
- அரங்கத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பு சிவபெருமானால் ஈர்க்கப்பட்டதாக இருக்கும். மைதானத்தில் அமைக்கப்படும் மின் விளக்குகள், திரிசூல வடிவில் வடிவமைக்கப்படும்.
- மைதானத்தின் மேற்கூரைகள் பிறை வடிவத்த பெற்று இருக்கும்.
- பார்வையாளர்களின் இருக்கைகள் கங்கை நதிக்கரயில் இருக்கும் படிகளை போன்று அமைக்கப்படும்
- மைதானத்தின் முகப்பு பில்வ பத்ரா இலையின் தோற்றத்தின் மாதிரியாக கட்டப்படும்
-
ரிங் ரோடுக்கு அருகில் உள்ள ராஜதலாப் பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானம் அடுத்த 30 மாதங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது
-
2025 டிசம்பரில் பணிகள் முடிந்து இந்த மைதானம் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்த ரூ. 121 கோடி செலவிட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.330 கோடி செலவில் 30,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் மைதானத்தை கட்ட திட்டமிட்டுள்ளது
நட்சத்திரங்கள் பங்கேற்பு:
இன்று நடைபெற உள்ள தொடக்க விழாவில் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.