Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. செக் வைக்கும் பாகிஸ்தான்.. அதிர்ச்சியில் ஐசிசி
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும், ஐசிசிக்கு பாகிஸ்தான் வாரியம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால் தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்:
நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடைசியாக 2017 ஆம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது.
முரண்டு பிடிக்கும் பிசிசிஐ:
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது. மேலும் இந்திய விளையாடும் போட்டிகளை ஐக்கிய அமீரகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பிசிசிஐ நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துணிச்சலான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி-க்கு எச்சரிக்கை
அதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும்,இந்திய அணி பரிந்துரைத்துள்ள ஹைபிரிட் மாடலில் ( Hybrid model) போட்டிகளை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று கடிதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் ஐசிசி மொத்த தொடரையும் பாகிஸ்தானில் இருந்து மாற்றம் செய்து தென் ஆப்பிரிக்காவில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அப்படியில்லை என்றால் இந்தியா விளையாடும் போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்தினால் போட்டிக்காக விற்பனை செய்யப்படும் டிக்கெட் தொகை முழுவதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமே கொடுக்க ஐசிசி முடிவு செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அரசு, தொடரை இங்கிருந்து மாற்றி வேறு இடத்தில் நடத்தினாலோ அல்லது இந்திய அணி பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலில் போட்டிகளை நடத்தும் பட்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கலந்து கொள்ளக்கூடாது என்று பாக் கிரிக்கெட் வாரியத்திடம் அந்நாட்டு அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதா சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கூட பாகிஸ்தானில் தான் நடைப்பெற்றது. ஆனால் இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது. இந்திய அணி கடைசியாக 2008 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் சென்றது. பாகிஸ்தான் அணியும் 2012-ஆம் தான் கடைசியாக இந்தியா வந்து ஒரு நாள் தொடரில் விளையாடியது. அதன் பிறகு இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி விளையாடின. இந்த விவகாரத்தில் வெகு விரைவில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விரைவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று ஐசிசி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.