Babar Azam: 74 இன்னிங்ஸில் நோ சதம்.. பரிதாப நிலையில் பாபர் அசாம்! என்னதான் ஆச்சு பாகிஸ்தான் ரன்மெஷினுக்கு?
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் கடந்த 74 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட விளாசதது அவர் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமாக திகழ்பவர் பாபர் அசாம். இவரது அபாரமான பேட்டிங் திறமைக்காக இவர் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டவர். ஆனால், இவருக்கு தற்போது போதாத காலம் என்றே கூற வேண்டும்.
பாபருக்கு போதாத காலம்:
மோசமான பேட்டிங் ஃபார்மால் கேப்டன்சியை இழந்ததுடன் ரன் எடுக்கவும் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 259 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
74 இன்னிங்ஸில் நோ சதம்:
நட்சத்திர வீரர் பாபர் அசாம் 16 ரன்களுக்கு அவுட்டானார். இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2023ம் ஆண்டு நேபாளம் அணிக்கு எதிராக விளாசியதே அவரது கடைசி சதம் ஆகும். அதன்பின்பு, அவர் 74 இன்னிங்ஸ்களில் ஆடி ஒரு சதம் கூட விளாசவில்லை.
புள்ளி விவரம் சொல்வது என்ன?
2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பாபர் அசாம் 2016ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை சதம் விளாசி வந்தார். அதன்பின்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தற்போது வரை ஒரு சதம் கூட விளாசவில்லை. ஒருநாள் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளார். அதில் 5 அரைசதங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். மொத்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 564 ரன்கள எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தமட்டில் அவர் கடைசியாக 2022ம் ஆண்டு சதம் விளாசியுள்ளார். அந்தாண்டு மட்டும் 4 சதங்கள், 7 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதன்பின்பு, 15 டெஸ்ட் போட்டிகளில் 28 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். ஆனால், 3 அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் 671 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
கேள்விக்குறியாகும் இடம்:
டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் இடம் கேள்விக்குறியாகிவிட்டது. அவர் கடைசியாக 2023ம் ஆண்டு டி20 போட்டிகளில் சதம் விளாசினார். அதன்பின்பு, கடந்த 2024ம் ஆண்டு 24 டி20 போட்டிகளில் ஆடி 6 அரைசதங்கள் உள்பட 738 ரன்கள் எடுத்தார். ஆனாலும், அவருக்கு அணியில் இடம் வழங்குவது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
774 நாட்கள்:
கடந்த 3 ஆண்டுகளில் அவர் ஆடிய 68 இன்னிங்ஸ்களில் அவர் சதம் விளாசவில்லை. மொத்தமாக கணக்கிட்டுப் பார்த்தால் அவர் சதம் விளாசி மொத்தம் 774 நாட்கள் ஆகிவிட்டது. மொத்தமாக அவர் சதம் விளாசி 74 இன்னிங்ஸ் ஆகிவிட்டது.
பாபர் அசாம் தற்போது தடுமாறினாலும் அவர் ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்ட ஒரே பேட்ஸ்மேன் பாபர் அசாம் மட்டுமே ஆவார். ஏனென்றால் அவர் பேட்டிங் திறனும், அவர் சதம் விளாசியதும் விராட் கோலியைப் போலவே இருந்தது. விராட் கோலிக்கும் கடந்த 2020 - 2022ம் ஆண்டு வரை இப்படி ஒரு மோசமான நிலை இருந்தது. ஆனால் அவர் அதன்பின்பு அவர் கம்பேக் கொடுத்து சச்சின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.
ரன்கள்:
31 வயதான பாபர் அசாம் 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 111 இன்னிங்சில் 4 ஆயிரத்து 316 ரன்கள் எடுத்துள்ளார். 134 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 291 ரன்கள் எடுத்துள்ளார். 128 டி20 போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 223 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்களும், 23 அரைசதங்களும் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 37 அரைசதங்களும், 19 சதங்களும் விளாசியுள்ளார். டி20 போட்டிகளில் 36 அரைசதங்களும், 3 சதங்கள் விளாசியுள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியை வீழ்த்திய ஒரே ஒரு பாகிஸ்தான் கேப்டன் என்ற பெருமையையும் பாபர் அசாம் மட்டுமே வைத்துள்ளார். பாபர் அசாமின் பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அதேசமயம், அவர் மீண்டும் சிறப்பாக ஆடுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.




















