Babar Azam: பாபர் அசாம் என்னாச்சு? தொடர்ந்து சொதப்பும் பாகிஸ்தான் கேப்டன்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பலாக ஆடி வருவது அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தான் அணி தன் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆடி வருகிறது. ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாபர் அசாம் சொதப்பல்:
இதில், தொடக்க வீரர் பக்கர் ஜமான் – இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டானார். பக்கர் ஜமான் 12 ரன்களில் அவுட்டான பிறகு கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். மிகவும் அபாயகரமான வீரரான பாபர் அசாம் 18 பந்துகள் ஆடி வெறும் 5 ரன்களில் அவுட்டானார். நெதர்லாந்தின் சுழற்பந்துவீச்சாளர் அக்கர்மேன் சுழலில் சாகிப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாகவும் உலா வரும் பாபர் அசாம் 5 ரன்களில் அவுட்டானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் நேபாள அணிக்கு எதிராக 151 ரன்களை குவித்த பிறகு, அதற்கு அடுத்து நடந்த போட்டிகளில் மிக மோசமான முறையில் ஆட்டமிழந்து வருகிறார்.
தொடர்ந்து சொதப்பல்:
Ball by ball highlights of Babar Azam's Master Class innings of 5(18) against Mighty Netherlands.#PAKvsNED #WorldCup2023#BabarAzam pic.twitter.com/D5xAzZbhwv
— Dhruv (@ImDhruv_18) October 6, 2023
ஆசிய கோப்பையில் நேபாள அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின்பு, வங்கதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதற்கு அடுத்து இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் 10 ரன்கள் எடுத்தார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் எடுத்தார்.
ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் 80 ரன்கள் எடுத்தார். தற்போது, பாகிஸ்தான் அணியின் இந்த உலகக்கோப்பைக்கான தொடக்கப் போட்டியிலே வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரை 109 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள பாபர் அசாம் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஆடுவது இதுவே முதன்முறை ஆகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் பாபர் அசாம் ஆடியிருந்தாலும் அவர் பாகிஸ்தான் மண்ணிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கம்பேக் எப்போது?
அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள பாபர் அசாம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக களமிறங்குவது இதுவே முதன்முறை ஆகும். கடந்த உலகக்கோப்பையிலே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த முறை கேப்டனாக களமிறங்கியுள்ள பாபர் அசாம் தொடர்ந்து சொதப்புவது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பைத் தொடரில் பாபர் அசாம் தொடர்ந்து இதேபோல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இதனால், அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
பாபர் அசாம் 109 ஒருநாள் போட்டிகளில் 109 ரன்களில் ஆடி 19 சதங்கள், 28 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 414 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் படிக்க: Rachin Ravindra: ’ஒரு சூறாவளி கிளம்பியதே’ சதத்தால் இங்கிலாந்தை பந்தாடிய இந்திய வம்சாவளி! யார் இந்த ரச்சின் ரவீந்திரா?
மேலும் படிக்க: ENG vs NZ WC 2023: டிக்கெட் எல்லாம் வித்துருச்சுனு பொய் சொன்னீங்களா? முதல் நாள் போட்டியே இப்படியா! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!