PAK vs ENG T20 WC Final : உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அசத்தப்போகும் 13 வயது இந்திய சிறுமி..! யார் இந்த ஜானகி..?
PAK vs ENG T20 WC Final : டி20 உலகக் கோப்பை போட்டியின் நிறைவு விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியப் பெண் ஜானகி ஈஸ்வர் பாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் நிறைவு விழா இன்று நடைபெற உள்ளது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியப் பெண் ஜானகி ஈஸ்வர், பிரபல ஆஸ்திரேலிய ராக் இசைக்குழுவான ஐஸ்ஹவுஸுடன் இணைந்து பாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜானகி ஈஸ்வர் யார் :
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் அனூப் திவாகரன் மற்றும் திவ்யா ரவீந்திரன். இவர்களுக்கு ஜானிகி ஈஸ்வர் என்று 13 வயது மகள் உள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். ஜானகியின் பெற்றோர் முதன்முதலில் அவருக்கு இசையை அறிமுகப்படுத்தினர். ஐந்து வயதாக இருந்தபோது, கர்னாடிக் பாடலைப் படிக்கத் தொடங்கினார் ஜானகி. பின்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த உலகப் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ 'தி வாய்ஸ்' மூலம் பிரபலமானவர் 13 வயது ஆஸ்திரேலிய சிறுமி ஜானகி ஈஷ்வர். இவர் தமிழ், இந்தி, இங்கிலிஸ் ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். இவர் தனது யூடியூப் பக்கத்தில் பல கோடி பேரை தனது பாடல் மூலம் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் ஆஸ்திரேலிய ராக் குழுவான ஐஸ்ஹவுஸுடன் இணைந்து பாட உள்ளார். இன்று மாலை டி20 கிரிக்கெட் போட்டியின் நிறைவு விழாவின் போது, அதில் "ஐஸ்ஹவுஸ் வி கேன் கெட் டுகெதர்" என்ற பாடலுக்கு ஜானகி பாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த தாண்டோ சிக்விலா என்பவரும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்- இங்கிலாந்து
உலகக் கோப்பை டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. எட்டாவது டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவும், நியூசிலாந்து தோல்வி அடைந்து வெளியேறின. இதையடுத்து, பாகிஸ்தானும், இங்கிலாந்தும் பைனலுக்கு முன்னேறியுள்ளன.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதும் இந்த ஆட்டம் மெல்போர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இந்த சிறப்பாக நடைபெறவுள்ளது.
நேருக்கு நேர்
20 ஓவர் உலக கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதே நேரம் அந்த ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் தான் வென்றது. அடுத்து 2010-ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரின் போது இவ்விரு அணிகளும் 'சூப்பர் 8' சுற்றில் சந்தித்தன. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டு உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் 2009இல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இரு அணிகளில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றாலும் அது அந்த அணிக்கு இரண்டாவது உலகக் கோப்பை ஆகும்.
”மிகச் சிறந்த அனுபவம்”
இதனிடையை இன்று மாலை நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்யின் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல பாடகி ஜானகி ஈஸ்வர் பங்கேற்று பாட உள்ளார். இதுகுறித்து ஜானகி ஈஸ்வர் கூறியதாவது, "மாபெரும் கூட்டத்தின் முன் நிகழ்ச்சி நடத்துவதும், உலகளவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒளிபரப்பப்படுவதும் நம்பமுடியாத அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும், பெற்றோர் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள். அவர்கள் மூலமாகத்தான் இந்த வாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொண்டேன். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று கூறினார்.