On This Day: சர்வதேச அளவில் கிரிக்கெட் ஆடிய முதல் இந்தியர்...! யார் இந்த ரஞ்சித்சிங்..?
வெறுப்புகளுக்கு மத்தியிலும் 1896ம் ஆண்டு ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ரஞ்சித்சிங் களமிறங்கினார்.
![On This Day: சர்வதேச அளவில் கிரிக்கெட் ஆடிய முதல் இந்தியர்...! யார் இந்த ரஞ்சித்சிங்..? On This Day Indian born K S Ranjitsinhji debuts for England v Australia in 2nd Test at Old Trafford; first Indian to play Test cricket IN 1896 On This Day: சர்வதேச அளவில் கிரிக்கெட் ஆடிய முதல் இந்தியர்...! யார் இந்த ரஞ்சித்சிங்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/15/2cf4f0d51d8b8523cba67beb8821f58f1689421713335102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிரிக்கெட்டில் இந்தியா கடந்து வந்த பாதை என்பது மிக நீண்ட நெடிய வரலாறு கொண்டது ஆகும். இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து நாட்டினர் இந்தியாவில் கிரிக்கெட்டை பழக்கப்படுத்தியதால் இன்று இந்தியாவின் ரத்தத்தில் கலந்த ஒன்றாக கிரிக்கெட் மாறிவிட்டது. இந்திய அணிக்காக இன்று சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கானோர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கலாம். ஆனால், சர்வதேச அளவில் முதன்முறையாக கிரிக்கெட் ஆடிய இந்தியரை பற்றி கேள்விப்பட்டதுண்டா..?
கிரிக்கெட் ஆடிய முதல் இந்தியர்:
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரியத் தொடங்கிய காலம் முதல் இந்தியாவில் கிரிக்கெட் வேரூன்றத் தொடங்கியது. ஆனால், அப்போது இந்தியா சுதந்திரம் பெறாத காரணத்தால் இந்தியர்கள் கிரிக்கெட் ஆடினாலும் அது உள்நாட்டிலோ அல்லது இங்கிலாந்தின் கவுண்டி அணிக்காக மட்டுமே ஆட முடிந்தது.
அன்றைய காலத்தில் (19ம் நூற்றாண்டு) கிரிக்கெட்டை இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய பணக்காரர்களும், நிலச்சுவான்தாரர்களும் மட்டுமே ஆடினார்கள். அவர்கள் இங்கிலாந்து நாட்டின் கவுண்டி அணிகளில் ஆடினாலும் சர்வதேச அரங்கில் ஆட அனுமதிக்கப்படவில்லை. அப்பேற்பட்ட சூழலில், 1896ம் ஆண்டு ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்காக இங்கிலாந்தைச் சேராத ஒருவராக களமிறங்கியவர்தான் ரஞ்சித்சிங்ஜி.
யார் இந்த ரஞ்சித்சிங்?
சர்வதேச அரங்கில் முதன்முதலாக கிரிக்கெட் ஆடிய இந்தியர் இவர்தான். இவர் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடினாலும் அப்போதைய இங்கிலாந்து தேர்வுக்குழு தலைவர் வெள்ளையர் அல்லாத ஒருவர் இங்கிலாந்து அணிக்காக ஆடுவதை விரும்பவில்லை. அந்த வெறுப்புகளுக்கு மத்தியிலும் 1896ம் ஆண்டு ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ரஞ்சித்சிங் களமிறங்கினார்.
அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 412 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்காக ஒன் டவுன் வீரராக களமிறங்கிய ரஞ்சித் 62 ரன்களை எடுத்தார். 2வது இன்னிங்சில் மிகவும் அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார். 185 பந்துகளில் 23 பவுண்டரியுடன் 154 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றாலும் ரஞ்சித்சிங் மிரட்டலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
72 சதங்கள்:
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்த ரஞ்சித்சிங் சஸ்செக்ஸ், கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக அணி, லண்டன் கவுண்டி அணிகள் மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டிற்காகவும் ஆடியுள்ளார். சர்வதேச அளவில் இங்கிலாந்து அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதம், 6 அரைசதங்கள் உள்பட 989 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 307 முதல் தர போட்டிகளில் ஆடி 72 சதங்கள், 109 அரைசதங்கள் உள்பட 24 ஆயிரத்து 692 ரன்கள் குவித்துள்ளார்.
ரஞ்சி டிராபி:
அவர் கிரிக்கெட்டில் ஆற்றிய பெரும் பங்கை நினைவு கூரும் வகையில், இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி இவரது பெயரிலே நடத்தப்படுகிறது. உலகப்போரில் இங்கிலாந்து நாட்டிற்காக போரிட்ட இவர் கர்னலாக பொறுப்பு வகித்தவர். துலீப்சிங்ஜி, திக்விஜய்சிங் ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவர்.
1896ம் ஆண்டு, 1899ம் ஆண்டு மற்றும் 1900ம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களிலே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ரஞ்சித்சிங். 1899ம் ஆண்டு மற்றும் 1900ம் ஆண்டுகளில் மட்டும் கவுண்டி ஆட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
நவாநகர் மகாராஜாவாக வாழ்ந்த ரஞ்சித்சிங் தன்னுடைய 60வது வயதில் 1933ம் ஆண்டு ஜாம்நகர் மாளிகையில் காலமானார்.
சர்வதேச அளவில் கிரிக்கெட் ஆடிய முதல் இந்தியரான ரஞ்சித்சிங், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமான நாள் இன்று.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)