On this day: தன் ஸ்டைலில் முடித்த தோனி..! 11 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியின் மாஸ் சம்பவம்!!
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை தொடரை வென்றது. அதன்பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ஆம் ஆண்டு இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வென்றது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி மகிலா ஜெயவர்தனேவின் சதத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 274 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் முதலில் சேவாக் மற்றும் சச்சின் வேகமாக ஆட்டமிழந்தனர். பின்னர் கம்பீர் மற்றும் விராட் கோலி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக ஆடி வந்த விராட் கோலி தில்ஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
#OnThisDay in 2011, India won the ICC Cricket World Cup with a massive @msdhoni six!
— ICC (@ICC) April 2, 2018
Who could forget this moment! 🎥 ⬇️ pic.twitter.com/Xy3xCogRIs
அதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அப்போது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கேப்டன் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார். அதன்பின்னர் அவர் செய்தது பெரிய வரலாறாக மாறியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அந்த இன்னிங்ஸ் எப்போதும் இடம்பெறும் இன்னிங்ஸாக அமைந்தது. மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை 3 ரன்களில் தவறவிட்டார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் தோனி 91* ரன்கள் குவித்தார். அத்துடன் ஒரு சிக்சர் விளாசி அவருடைய ஸ்டைலில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்று தந்தார். இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்றது. தன்னுடைய கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கோப்பையுடன் விடை பெற்றார். சச்சின் டெண்டுல்கரின் நீண்ட நாள் கனவான உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது நிறைவான நாள் இன்று. இந்திய கிரிக்கெட்டில் 1983 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதிக்கு பிறகு ஏப்ரல் 2, 2011 எப்போதும் மறக்க முடியாத நாளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்