ODI World Cup Records: உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள்.. இந்திய அணி வெற்றிபெற்றது எப்படி..? ஒரு பார்வை!
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் எந்த ஆண்டு, எங்கே மோதியது? அதில் இந்திய அணி எப்படி வெற்றிபெற்றது என்ற முழு பட்டியலை காணலாம்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்றாகும். இரு நாடுகளுக்கிடையே இருக்கும் அரசியல் காரணங்களுக்காக ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இந்தியாவும், பாகிஸ்தான் அணிகளும் மோதி வருகின்றன.
எனவே இப்படியான போட்டிகளும் எப்போது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை தூண்டும். அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் இந்திய அணியே வெற்றிபெற்றது. இந்த போட்டி மட்டுமல்லாது இதுவரை நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 8 முறையும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது.
இந்தநிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் எந்த ஆண்டு, எங்கே மோதியது? அதில் இந்திய அணி எப்படி வெற்றிபெற்றது என்ற முழு பட்டியலை காணலாம்.
இந்தியா - பாகிஸ்தான் (1992 சிட்னி)
கடந்த 1992ம் ஆண்டு சிட்னியில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது, இந்திய அணியின் கேப்டனான முகமது அசாருதீன், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அஜய் ஜடேஜா 77 பந்துகளில் 46 ரன்களும், சச்சின் டெண்டுல்கரின் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும் விளாச இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை எடுத்தது.
217 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 173 ரன்களுக்குள் ஆட்டமிழக்க, 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இருப்பினும், அந்த ஆண்டு பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
Now It's 8 🇮🇳 - 0 🇵🇰#INDvPAK #ODIWorldCup2023 #ICCWorldCup2023 #INDvsPAKpic.twitter.com/xRsVxb8x0B
— RVCJ Media (@RVCJ_FB) October 14, 2023
இந்தியா - பாகிஸ்தான் ( 1996 பெங்களூர்)
1996 உலகக் கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் பெங்களூரில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நவ்ஜோத் சிங் சித்துவும், சச்சின் டெண்டுல்கரும் இணைந்து 90 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
பின்னர் உள்ளே வந்த அஜய் ஜடேஜா 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து 287 ரன்களை குவித்தார். அமீர் சோஹைல் 55 ரன்களை விளாச, சயீத் அன்ஸ்வர் 48 ரன்களைச் சேர்க்க, மெதுமாக பாகிஸ்தான் பக்கம் வெற்றி திரும்பியது. அந்த நேரத்தில் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் ( 1999 மான்செஸ்டர்)
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் முகமது அசாருதீன் உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவை வழிநடத்தினார். டாஸ் முடிவில் பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முறை ராகுல் டிராவிட் 61 ரன்களும், கேப்டன் முகமது அசாருதீன் 59 ரன்களை எடுக்க இந்திய அணி மொத்தமாக 227 ரன்களை சேர்த்தது.
பாகிஸ்தான் பேட்டிங் செய்ய வந்தபோது வெங்கடேஷ் பிரசாத் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் (2003 செஞ்சுரியன்)
இந்த முறை உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சயீத் அன்வர் அபார சதம் விளாச, பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்களை குவித்தது.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியும் கெத்து காட்டியது. நம்பிக்கை நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்களை விளாச, இறுதிக்கட்டத்தில் யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் (2011 மொஹாலி)
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரு அணிகளும் அரையிறுதி போட்டியில் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. வழக்கம்போல், சச்சின் டெண்டுல்கர் 85 ரன்களை எடுத்து, இந்திய அணி 260 ரன்கள் எடுக்க உதவினார்.
அதனை தொடர்ந்து, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, முனாஃப் படேல், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, 29 ரன்கள் வித்தியாசயத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி, இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் (2015 அடிலெய்டு)
ஆறாவது உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. விராட் கோலியின் அபார சதத்தால் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக 300 ரன்களை கடந்தது இந்திய அணி. அன்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சொஹைல் கானின் 5 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார்.
முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, பாகிஸ்தானை 224 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது இந்திய அணி.
இந்தியா - பாகிஸ்தான் (2019 மான்செஸ்டர்)
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ரோஹித் சர்மா 113 பந்துகளில் 140 ரன்களை எடுக்க, அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலியும் 77 ரன்களை சேர்த்தார்.
பந்துவீச்சில் விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினர்.
இந்தியா - பாகிஸ்தான் (2023 அகமதாபாத்)
2023 உலகக் கோப்பையில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்குள் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா உள்பட ஐந்து இந்திய பந்துவீச்சாளர்கள் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 86 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதமும் அடிக்க, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.