NZ vs SL, Innings Highlights: இலங்கையின் டாப் ஆர்டர் சொதப்பல்; தண்ணி காட்டிய தீக்ஷனா; நியூசிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு
NZ vs SL Innings Highlights: இலங்கை அணி வீரர்கள் ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டி விளையாடும் மனநிலைக்குச் சென்றுவிட்டனர். நியூசிலாந்து அணியின் ரன்ரேட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவே இவ்வாறு செய்தனர்.
NZ vs SL Innings Highlights: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், 4வது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டிகளில் ஒன்றாக இன்றைய போட்டி பார்க்கப்பட்டது.
இந்த தொடரின் தொடக்கத்தில் மிகவும் வலுவான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நியூசிலாந்து அணி அதன் பின்னர் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துத்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால் நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இப்படியான நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமான சின்னச்சாமி மைதானத்தில் இலங்கை அணி களமிறங்கியது முதல் கிரிக்கெட் விளையாடவே தெரியாத அணி என்பதைப் போல் விளையாடியது. நியூசிலாந்து அணியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணியின் டாப் ஆர்டர் மளமளவென தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் பார்க்கும்போது இல்ங்கை அணி வீரர்கள் மைதானத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.
இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதைப் பார்த்தபோது இந்த தொடரில் இரண்டாவது முறையாக இரட்டை இலக்க ரன்களில் ஆல் -அவுட் ஆகிவிடுவார்களோ என யோசிக்கும் அளவிற்கு விளையாடினர். ஆனால் இலங்கை அணி இவ்வளவு மோசமாக விளையாடி வந்தாலும், அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடியது தொடக்க வீரர் குஷால் பெரரா மட்டும் தான். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 22 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி அரைசம் விளாசிய குஷால் பெராரா தனது விக்கெட்டினை போட்டியின் 10வது ஓவரில் ஃபெர்குசன் பந்தில் இழக்க போட்டி முழுக்க முழுக்க நியூசிலாந்தின் கைகளுக்கு வந்தது.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி மற்றும் ஃபெர்குசனின் வேகத்தில் இலங்கை அணி கொஞ்சம் கொஞ்சமாக சரணடைந்தது. 20 ஓவர்கள் முடிவதற்கு முன்பாகவே இலங்கை அணி ஆல் - அவுட் ஆகிவிடும் என ரசிகர்கள் நினைக்கைத் தொடங்கி விட்டனர். ஆனால் எப்படியோ சமாளித்த இலங்கை அணியின் டைல் எண்டர்கள் இலங்கை அணியை 100 ரன்களைக் கடக்க வைத்ததுடன், ஓரளவிற்கு தாக்குபிடிக்கவும் செய்தனர். குறிப்பாக இலங்கை அணி வீரர்கள் ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டி விளையாடும் மனநிலைக்குச் சென்றுவிட்டனர். இதன்மூலம் நியூசிலாந்து அணியின் ரன்ரேட்டில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் தேவையில்லாத ஷாட்களை அவர்கள் அடிக்கவே இல்லை.
இறுதியில் இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 171 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மொத்தம் 7 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. போல்ட் மூன்று விக்கெட்டுகளும் சாண்ட்னர், ஃபெர்குசன் மற்றும் ரவீந்திரா தலா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இலங்கை அணியின் தீக்ஷனா 91 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.