(Source: Poll of Polls)
SA Vs AUS, Innings Highlights: பலன் அளிக்குமா மில்லரின் போராட்டம்; ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு வைத்த தென்னாப்பிரிக்கா
SA Vs AUS, Innings Highlights: நெருக்கடியான சூழலில் களமிறங்கிய டேவிட் மில்லர் பொறுப்பாக ஆடி தனது சதத்தினை 115 பந்துகளில் எட்டினார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது உலகக் கோப்பை இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து இன்று அதாவது நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. அதாவது போட்டியின் தொடக்கம் முதல் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் கூட்டணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை அள்ளியது. அதாவது தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டெம்பா பவுமா, டி காக், மார்க்ரம், வென் டர் டசன் என 4 விக்கெட்டுகளை மளமளவென அள்ளியது.
நாக் அவுட் போட்டியில் மிகவும் மோசமான தொடக்கத்தினை சற்றும் எதிர்பார்க்காத தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் தாக்குபிடிக்குமா 100 ரன்களை எட்டுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது. பெரும் நெருக்கடியில் இருந்த தென்னாப்பிரிக்கா அணியை மில்லர் மற்றும் க்ளாசன் கூட்டணி மெல்ல மெல்ல மீட்க போராடியது. இருவரும் சிக்ஸர்கள் விளாசுவதில் மன்னாதி மன்னனாக இருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் மிகவும் நிதானமாகவே ஆடினர். களத்தில் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அவ்வப்போதுதான் பவுண்டரிகளைப் பார்க்க முடிந்தது.
இருவரும் இணைந்து தென்னாப்பிரிக்கா அணியை மெல்ல மெல்ல மீட்கும் பணியை சிறப்பாக செய்து வந்தனர். இருவரும் களத்தில் இறுதிவரை இருந்தால் தென்னாப்பிரிக்கா அணி சவாலான ஸ்கோரினை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், பந்து வீச டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்டை அழைத்தார். ட்ராவிஸ் ஹெட் வீசிய முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய க்ளாசன் 4வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த மர்கோ யான்சன் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் ஹெட் பந்து வீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் இழந்து வெளியேறினார்.
பெரும் சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த தென்னாப்பிரிக்கா அணி மீண்டும் ஒரு சரிவினை சந்தித்தது. 6 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்து போராடி வந்த நிலையில் அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக மில்லர் மட்டும் இருந்தார். மில்லருக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்க கோட்ஸீ களமிறங்கினார். இருவரும் அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்த போராடினர். பொறுப்பாக ஆடிய மில்லர் தனது அரைசத்தினை 70 பந்துகளில் கடந்தார்.
நிதானமாக ஆடிவந்த கோட்ஸீ தனது விக்கெட்டினை கம்மின்ஸ் பந்தில் தேவையில்லாமல் இழந்து வெளியேறினார். ஆனால் ரிவ்யூவில் பார்க்கும்போது பந்து பேட்டில் படாமல் அவரது முழங்கையில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. அதன் பின்னர் வந்த கேசவ் மஹராஜ் தனது ஓரளவுக்கு ஒத்துழைப்பு தருவார் என எதிர்பார்க்கப்பட்டபோது 4 ரன்களில் அவர் வெளியேறினார். தென்னாப்பிரிக்கா அணி 200 ரன்களை எட்டுவதற்குள் விக்கெட்டுகளை இழந்தது. பொறுப்புடன் ஆடிய மில்லர் 115 பந்துகளில் தனது சதத்தினை எட்டினார். ஆனால் அடுத்த பந்தில் வெளியேறினார். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டி முழுவதும் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக ஃபீல்டிங் செய்தது.