ODI WC 2023 SA vs ENG: இங்கிலாந்தை வாரி சுருட்டிய தென்னாப்பிரிக்கா! 229 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி!
உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் இன்று கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் கடந்த போட்டியில் தங்களை விட பலம் குறைந்த முறையே நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தோல்வியை தழுவியிருந்ததால் இந்த போட்டியில் அவர்கள் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி இருந்தது.
400 ரன்கள் டார்கெட்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி கிளாசென், ஜான்சென், வான்டர் டுசென் அதிரடியால் 399 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி ஜோடியான மார்க் வுட் - அட்கின்சன் ஜோடி மட்டும் அதிரடியாக ஆடி 70 ரன்களை குவித்ததால் அந்த அணி 170 ரன்களை எட்டியது. கடைசியில் 170 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இதனால், தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஹென்ட்ரிக்ஸ் அபாரமாக ஆடி 85 ரன்களும், வான்டர் டுசென் 60 ரன்களும் எடுக்க, கடைசி கட்டத்தில் அதிரடி மட்டுமே காட்டிய கிளாசென் சதமும், ஜான்சென் 75 ரன்களும் எடுக்க தென்னாப்பிரக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை எடுத்தது.
சுருண்ட இங்கிலாந்து:
இதையடுத்து, 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே சறுக்கல் என்றே சொல்லலாம். இமாலய இலக்கு என்பதால் அதிரடியாக ஆட முயற்சித்தனர். பார்ஸ்டோ சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசிய நிலையில் 10 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஜோ ரூட் 2 ரன்களில் அவுட்டாக, டேவிட் மலன் 6 ரன்களில் அவுட்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ஹாரி ப்ரூக் நிதானமாக ஆடினர். கேப்டன் பட்லர் வந்தவுடன் பவுண்டரி, சிக்ஸரையும் விளாசினார். ஆனால், அதிரடி காட்ட வேண்டும் என்ற வேகத்தில் விக்கெட்டை 15 ரன்களில் பறிகொடுத்தார். ஹாரி ப்ரூக் 17 ரன்களிலும், டேவிட் வில்லி 12 ரன்களிலும், ரஷீத் 10 ரன்களிலும் அவுட்டானார். 100 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து சுருண்டு விடும் என்றே அனைவரும் நினைத்தனர். 16.3 ஓவர்களில் 100 ரன்கள் இருந்தபோது மார்க் வுட் – அட்கின்சன் ஜோடி சேர்ந்தனர்.
229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி:
தோல்வி உறுதி என்பது நிச்சயமான பிறகு இருவரும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினர். மார்க் வுட் ஒருபுறம் விளாச, அட்கின்சன் மறுபுறம் விளாசினார். மார்க் வுட் சிக்ஸர்களாக பறக்கவிட்டு இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். இதனால், திடீரென இங்கிலாந்தின் ஸ்கோர் எகிறியது. அபாரமாக இருவரும் ஆடியதால் தத்தளித்த இங்கிலாந்து 150 ரன்களை கடந்தது. ஆனாலும், துரதிஷ்டவசமாக 21 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த அட்கின்சன் போல்டானார். டோப்ளே காயம் காரணமாக களமிறங்காததால் இங்கிலாந்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மார்க் 17 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
170 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி 3 தோல்வி 1 வெற்றியுடன் 9வது இடத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகளில் இங்கிலாந்து கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.