IND vs AUS World Cup 2023: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்குகிறாரா சென்னை மைந்தன் அஸ்வின்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா ஆடும் போட்டியில் ஆல்ரவுண்டர் அஸ்வின் களமிறங்க அதிகளவு வாயப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து – நியூசிலாந்து மோதலுடன் நேற்று தொடங்கியது. இந்தியாவில் நடைபெறும் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி இந்தியா ஆடும் போட்டிகளே ஆகும்.
இந்தியா - ஆஸ்திரேலியா:
இந்தியா தனது முதுல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டி சென்னையில் வரும் 8-ந் தேதி அதாவது நாளை மறுநாள் நடக்கிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்த சூழலில், இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக தொடக்க வீரர் சுப்மன்கில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக இஷான்கிஷன் அல்லது கே.எல்.ராகுல் ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளேயிங் லெவனில் ஆஸ்திரேலியா:
நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு சென்னை மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ போட்டியிலும் ஆடிய அனுபவம் அதிகளவில் உள்ளது.
மேலும் சிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் அணியில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் ஆகும். அஸ்வின் ஆடும் லெவனில் களமிறங்கினால் குல்தீப் யாதவ் களமிறக்கப்படமாட்டார் என்றே தெரிகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய எகானமி ரேட் 5.71 ஆக வைத்துள்ளார். சென்னையில் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அஸ்வின் இருந்தால் பலம்
அஸ்வின் இதுவரை 115 ஒருநாள் போட்டிகளில் ஆடி 155 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சாக 25 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான 1 அரைசதம் உள்பட 707 ரன்களை எடுத்துள்ளார். ஏற்கனவே 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆடிய அனுபவமும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், சென்னை மண்ணிலும் ஆடிய அனுபவம் கொண்ட அஸ்வின் ஆஸஅதிரேலிய அணிக்கு எதிராக களமிறங்குவது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனே, கிரீன், அப்பாட், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆவார். இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ், ஷமி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா முக்கிய பந்துவீச்சாளர்களாக உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய அனுபவம் இரண்டு அணியிலும் உள்ள வீரர்கள் பலருக்கு நிறைய உள்ளதால் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த இரண்டு அணி வீரர்களும் முனைவார்கள். நிச்சயமாக இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே கூறலாம்.
மேலும் படிக்க: Cool Suresh: பிக்பாஸ் வீட்டில் திடீர் பரபரப்பு.. மூக்குத்தி அணிந்த கூல் சுரேஷ்.. பலரும் போராட்டம்.. என்ன காரணம்?
மேலும் படிக்க: Asian Games 2023 LIVE: ஆடவர் கிரிக்கெட் அரையிறுதி போட்டி .. 115 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான்..வெல்லுமா ஆப்கானிஸ்தான்..!