AUS Vs SL, Match Highlights: ’ஒருவழியாக..’ ஹாட்ரிக் தோல்வியில் இருந்து விடுதலை; இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா
AUS Vs SL, Match Highlights: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் மட்டுமே சிறப்பாக அமைந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் மாதம் 5ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 9 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் அனைத்து அணிகளும் வெற்றிக்கு மட்டும் இல்லாமல், ரன்ரேட்டினையும் மனதில் வைத்து பெரும் கூட்டுமுயற்சியுடன் விளையாடி வருகின்றது.
ஆஸ்திரேலியா - இலங்கை:
இந்நிலையில் இன்று அதாவது, அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஐந்து முறை உலகக் கோப்பை வென்ற அணி என்ற பெருமைக்குரிய நாடாக இருந்தாலு, இந்த தொடரில் தான் களமிறங்கிய இரண்டு போட்டிகளும் மிக மோசமான தோல்வியை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணியும், அதிகப்படியான அறிமுக வீரர்களைக் கொண்ட இலங்கை அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம், இரு அணிகளும் இந்த தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்பதுதான்.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் மட்டுமே சிறப்பாக அமைந்தது. அதன் பின்னர் யாரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்காததால், இலங்கை அணி 43.3 ஓவர்கள் முடிவில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா வெற்றி:
அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவர் மட்டும்தான் சிறப்பாக அமைந்தது. 4வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியிலும் போராடித்தான் வெற்றி பெறும் என அனைவரும் யோசிக்க ஆரம்பித்தனர். ஆனால் இலங்கை அணிக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையை தனது பேட்டினால் துவம்சம் செய்தார். சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டினை இழந்தாலும் அது அந்த அணியின் வெற்றியினை பாதிக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 35.2 ஓவர்களில் 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முடிவுக்கு வந்த தோல்விப் பயணம்
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பையில் தொடர் தோல்விப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது நடப்புத் தொடரில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறவில்லை. அதேபோல் இதற்கு முன்னர் நடைபெற்ற 12வது உலகக் கோப்பை தொடரிலும் கடைசி 2 போட்டிகள் தோல்வியில் முடிந்தது. இதன் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவின் தோல்விப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இவர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.