ODI WC SAvsENG: கிளாசென் மிரட்டல் சதம்.. ஜான்சென் அதகளம்..! தெ.ஆப்பிரிக்க ருத்ரதாண்டவம்! இங்கிலாந்துக்கு 400 ரன்கள் டார்கெட்!
உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
உலகக் கோப்பையில் நெதர்லாந்திடம் வெற்றியை பறிகொடுத்த தென்னாப்பிரிக்காவும், ஆப்கானிஸ்தானிடம் வெற்றியை பறிகொடுத்த இங்கிலாந்து அணியும் இன்று மோதி வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ஹென்ட்ரிக்ஸ் – டுசென் அபாரமாக ஆடினர். இருவரும் இணைந்து நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் அசத்தினார். இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர்.
கிளாசென் - ஜான்சென் அபாரம்:
அணியின் ஸ்கோர் 125 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடிய டு சென் 61 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் மார்க்ரம் களமிறங்கினார். மறுமுனையில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய ஹென்ட்ரிக்ஸ் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 75 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து மார்க்ரமுடன் கிளாசென் ஜோடி சேர்ந்தார். கிளாசென் களமிறங்கியது முதல் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். இதனால், சீராக சென்ற தென்னாப்பிரிக்கா ஸ்கோர் மின்னல் வேகத்தில் ஏறத் தொடங்கியது. மார்க்ரம் 42 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் மில்லர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 243 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணிக்காக கிளாசென்னுடன் ஜான்சென் ஜோடி சேர்ந்தார்.
கிளாசென் மிரட்டல் சதம்:
இருவரும் இணைந்தது முதல் பந்துகள் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறந்து கொண்டே இருந்தது. இதனால், தென்னாப்பிரிக்கா அணி 300 ரன்களை கடந்தது. அபாராக ஆடிய கிளாசென் 61 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளித்த ஜான்சென் அரைசதத்தை கடந்தார். இவர்களது அதிரடியை கட்டுப்படுத்த முடியாத இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கி நின்றனர்.
350 ரன்களை கடந்த தென்னாப்பிரிக்க அணி 400 ரன்களை நோக்கி ஆடியது. வெயில் காரணமாக கிளாசென் அசதியாக மறுமுனையில் ஜான்சென் சிக்ஸர்களாக பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். கடைசி ஓவரில் கிளாசென் போல்டானார். அவர் 67 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 109 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 399 ரன்களை குவித்தது. ஜான்சென் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 75 ரன்கள் விளாசினார்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டோப்ளே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால், டோப்ளதான் 8.5 ஓவர்கள் வீசிய 88 ரன்களை வாரி வழங்கினார். அட்கின்சன் மற்றும் ரஷீத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.