(Source: ECI/ABP News/ABP Majha)
NZ vs BAN : இதுதான் புத்தாண்டு கிஃப்ட்!! நியூ இயர் சதம் அடித்து கெத்து காட்டிய டேவோன் கான்வே!
2022ம் ஆண்டிற்கான முதல் சதத்தை நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே விளாசியுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று 2022ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த புத்தாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஆண்டின் முதல் நாளான இன்றே தொடங்கியது. வங்காள தேச அணியும், நியூசிலாந்து அணியும் மோதும் முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நியூசிலாந்து நாட்டில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் 1 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, இளம் வீரர் வில் யங்கும், டேவோன் கான்வேவும் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரைசதம் அடித்தார். அவர் அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ரன் அவுட்டானார். 135 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் வில் யங் ஆட்டமிழந்தார். பின்னர், இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ள ராஸ் டெய்லர் களமிறங்கினார். அவர் டேவோன் கான்வேவிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
சிறப்பாக ஆடிய டேவோன் கான்வே 2022ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்தார். அவருக்கு நன்றாக ஒத்துழைப்பு அளித்துக்கொண்டிருந்த ராஸ் டெய்லர் 64 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 227 ரன்களை எட்டியபோது புத்தாண்டின் முதல் சதத்தை பதிவு செய்த டேவோன் கான்வே ஆட்டமிழந்தார். அவர் 227 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 1 சிக்ஸருடன் 122 ரன்கள் எடுத்து வங்காளதேச கேப்டன் மோமிநுல் பந்தில் லிட்டன் தாசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்துள்ளது.
வங்காளதேச அணியில் ஷோரிபுல் இஸ்லாம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எபடோட் ஹூசைன், கேப்டன் மோமிநுல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தென் ஆப்பிரிக்காவில் புத்தாண்டை கொண்டாடும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்