Noman Ali-Sajid Khan: 52 ஆண்டுகளுக்கு பிறகு! புது வரலாறு படைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்!
IND vs NZ 1st Test: 52 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20 விக்கெட்டுகளையும் பந்துவீச்சாளர்கள் இருவர் கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி முல்தானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர்கள் நோமன் அலியும், சஜித்கானும் காரணமாக இருந்தனர்.
இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களான சஜித்கான் 9 விக்கெட்டுகளையும், நோமன் அலி 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்தை நிலைகுலைய வைத்தனர். இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே கைப்பற்றி பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
7வது முறை:
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் 2 பந்துவீச்சாளர்கள் மட்டும் கைப்பற்றுவது இது 7வது முறையாகும்.
- ஆஸ்திரேலியாவின் நோபிள் ( 13 விக்கெட்டுகள்), எச். ட்ரம்பிள் ( 7 விக்கெட்டுகள்) இங்கிலாந்துக்கு எதிராக மெல்போர்னில் 1902ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக இந்த சாதனையை படைத்தனர்.
- இங்கிலாந்தின் ப்ளைத் ( 11), ஹர்ஸ்ட் ( 9) ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பர்மிங்காமில் 1909ம் ஆண்டு 20 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- இங்கிலாந்திற்கு எதிராக 1910ம் ஆண்டு நடந்த டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் வோக்லர் ( 12) ஃபாக்னர் (8) 20 விக்கெட்டுகளை முழுமையாக கைப்பற்றியுள்ளனர்.
- 1956ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த போட்டியில் இங்கிலாந்தின் லேகர் (19), லாக் (1) ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 20 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- 1956ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானின் மக்மூத் (13) மற்றும் கான் முகமது ( 7) ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 20 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- கடைசியாக 1972ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் மாஸ்ஸி(16), டென்னிஸ் லில்லி(4) விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
- இப்போது சஜித்கான்(9) மற்றும் நோமன் அலி(11) விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
52 ஆண்டுகளுக்கு பிறகு:
1972ம் ஆண்டுக்கு பிறகு எத்தனையோ டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும் இந்த சாதனை நிகழ்த்தப்படாமலே இருந்தது. தற்போது 52 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் இரண்டு பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியிருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
31 வயதான சஜித்கானும், 38 வயதான நோமன் அலியும் உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் குறைவான போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளனர்.