Rohit Sharma: "பெரிய ரன்கள் அடிக்கவில்லைதான்.. ஆனாலும் மகிழ்ச்சிதான்.." மனம் திறந்த ரோகித்சர்மா..!
"நான் இப்போது எனது ஆட்டத்தை சிறிது மாற்ற முயற்சிக்கிறேன், பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் அதைப் பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை, ”என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, சமீப காலங்களில் பெரிய சதங்கள் இல்லாதது பற்றி கவலைப்படவில்லை எனவும், அவர் தனது தற்போதைய பேட்டிங்கில் மிகவும் திருப்தியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பெரிய ரன்கள் குறித்து கவலைப்படவில்லை
ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்தவர் என்னும் பெருமையை கொண்ட அதிரடி வீரர், ரோஹித் ஷர்மா கடைசியாக 2020 ஜனவரியில் தான் ஒருநாள் போட்டி வடிவத்தில் சதம் அடித்தார் என்பது பெரும் விவாதத்திற்குரிய பொருளாக மாறி உள்ளது. சதங்கள் அடிக்கவில்லை என்றாலும் அணிக்கு தேவையான நேரத்தில் ரன்கள் குவித்து வருகிறார்.
கடந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் கூட தொடக்க ஆட்டக்காரர் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்களை விளாசினார். அந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டி முடிவில் பேசிய ரோஹித் ஷர்மா, "நான் இப்போது எனது ஆட்டத்தை சிறிது மாற்ற முயற்சிக்கிறேன், பந்து வீச்சாளர்களை வீழ்த்த முயற்சிக்கிறேன், அது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், அழுத்தத்தை அவர்கள் மீது வைக்க முயற்சிக்கிறேன். பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் அதைப் பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை, ”என்று கூறினார்.
எனது பேட்டிங் மகிழ்ச்சிதான்
“எனது பேட்டிங்கில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது அணுகுமுறையை நான் மிகவும் சீராக வைத்துள்ளேன். எனது ஆட்டமுறை குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். பெரிய ஸ்கோர் அருகில்தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். 50 ஓவர் உலகக் கோப்பை இந்த ஆண்டின் பிற்பகுதியில் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள நிலையில், அதில் நுழைவதற்கு முன்பு அணி அனைத்து வகையான விஷயங்களையும் பரிசோதனை செய்ய விரும்புகிறது", என்றார். முகமது ஷமி தலைமையிலான பந்துவீச்சாளர்களின் தாக்குதலால் நியூசிலாந்தை 108 ரன்களுக்கு சுருட்ட, தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 20.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து அந்த ரன்னை எட்டி தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சாளர்களின் சிறந்த செயல்பாடு
பந்துவீச்சை பொறுத்தவரை ஷமி (3/18) முகமது சிராஜ் (1/10), ஹர்திக் பாண்டியா (2/16) ஆகியோர் நல்ல உறுதுணையாக இருந்தனர். ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தங்கள் உயர்தர வேகப்பந்துவீச்சினால் நியூசி பேட்ஸ்மேன்களை கதற விட்டனர். போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ரோஹித் அணியின் முடிவை மறந்து சற்று நேரம் யோசித்தது வைரலானது. பிறகு ரோஹித் பந்துவீசத் தேர்வு செய்ய, நியூசிலாந்தை 15 ரன்களுக்குள் 5 விக்கெட் வீழ்த்தி நிலைகுலைய செய்தது. "இந்த கடைசி ஐந்து ஆட்டங்களில், பந்துவீச்சாளர்கள் உண்மையில் முன்னேறிவிட்டனர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அவர்களிடம் எதைக் கேட்டோமோ, அதை அவர்கள் வழங்கினர். குறிப்பாக இந்தியாவில் இதைச் செய்வது அவசியம். அவர்களுக்கு உண்மையான திறமைகள் உள்ளன", என்று பந்துவீச்சாளர்கள் குறித்து ரோஹித் ஷர்மா பேசினார்.
250 ரன்கள் கூட சவாலாக இருந்திருக்கும்
"நேற்று இரவில் நாங்கள் இங்கு பயிற்சி எடுத்தபோது உணர்ந்தோம், பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவி இருந்தது. அதனால்தான் நாங்கள் பந்து வீசி குறைந்த ரன்களுக்குள் சுருட்ட விரும்பினோம், 250 ரன் எடுத்திருந்தால் கூட மிகவும் சவாலான போட்டியாக இருந்திருக்கும். ஷமியும் சிராஜும் நீண்ட நேரம் பயிற்சி செய்ய விரும்பினர், ஆனால் நான் அவர்களிடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு பெரிய டெஸ்ட் தொடர் வரவிருப்பதாகவும், அதற்குள் காயம் ஏற்படாமல் இருக்கவும் வேண்டும் என்று சொன்னேன்," என்றார். பார்ட்னர்ஷிப்களை உருவாக்கத் தவறியது அணியை காயப்படுத்தியதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறினார். “டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். இந்தியா நீண்ட நேரம் சரியான பகுதிகளில் பந்து வீசியது, எங்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக எங்களால் ஒரு பார்ட்னர்ஷிப்பை கூட உருவாக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினாலும், துரதிர்ஷ்டவசமாக எங்களால் விரைவாக ஆட்டத்தை மாற்ற முடியவில்லை,” என்று லாதம் கூறினார்.