(Source: ECI/ABP News/ABP Majha)
விராட் கோலியின் பத்தாண்டு பழைய ட்வீட்... தோண்டி எடுத்து ட்ரால் செய்யும் ரசிகர்கள்!
2011ஆம் ஆண்டு விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டிருந்த ட்வீட்டை, நியூசிலாந்துடனான தோல்விக்குப் பிறகு, ரசிகர்கள் தோண்டி எடுத்து, ட்ரால் செய்து வருகின்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்த் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தோல்வியைத் தழுவியது. முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டும், வெறும் 110 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டிகளின் ஒன்றான இந்தப் போட்டி கடந்த அக்டோபர் 31 அன்று துபாய் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்திய அணியை வென்றதன் மூலம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்திருந்த இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியிடமும் இரண்டாவது முறையாகத் தோல்வியைத் தழுவியிருப்பதால், இந்திய அணி செமி ஃபைனல்ஸ் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, கடும் வருத்தமும் அடைந்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், சில நலம் விரும்பிகளும் கோபத்தை வெளிப்படுத்தி வரும் ரசிகர்களை அமைதி பேணுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் கோபமான சில ரசிகர்கள் விராட் கோலியில் பழைய ட்வீட் ஒன்றைத் தற்போது தோண்டி எடுத்து ட்ரால் செய்து வருகின்றனர்.
`தோல்விக்காக வருந்துகிறேன்.. இப்போது வீட்டுக்குச் செல்கிறேன்’ என்று 2011ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் விராட் கோலி. நியூசிலாந்த் அணியுடனான தோல்விக்குப் பிறகு, இந்த ட்வீட்டை ரசிகர்கள் தோண்டி எடுத்து, அதனை ரீ ட்வீட் செய்து தங்கள் கருத்துகளை ட்ராலாகப் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
Sad for the loss :( going home now
— Virat Kohli (@imVkohli) January 23, 2011
14.3 ஓவர்களில் முதலாவதாக களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் 49 ரன்களை எடுக்க, அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 33 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். 19 பந்துகள் வீசி, 2 விக்கெட்களை எடுத்த இந்திய அணியின் ஜஸ்ப்ரீத் பும்ரா சிறந்த பவுலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்திய அணியின் சார்பில் அதிக ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
நடந்து முடிந்த இந்தியா, நியூசிலாந்து ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி, நியூசிலாந்து அணிக்கு ஃபீல்டிங் பயிற்சியைப் போல இருந்ததாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் தங்கள் வேகத்தை அதிகப்படுத்தி இறங்கி அடித்தாலும், அவற்றை நியூசிலாந்து அணி கட்டுப்படுத்தினர். மேலும், மொத்தம் வீசப்பட்ட பந்துகளில் 54 டாட் பந்துகள் என்பதால், இந்திய அணி தங்களுக்குக் கொடுக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமார் 9 ஓவர்கள் எந்த ரன்களையும் எடுக்கவில்லை எனத் தெரிய வருகிறது. இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.