Watch Video: முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்தாரா? பாக்ஸிங் டே டெஸ்டில் எழுந்த சர்ச்சை - வைரலாகும் வீடியோ!
நன்றாக விளையாடி கொண்டிருந்த முகமது ரிஸ்வானுக்கு அவுட் கொடுக்கப்பட்ட பின்னர் இந்த விவாதங்கள் ஆரம்பமாகின.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த விதம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நன்றாக விளையாடி கொண்டிருந்த முகமது ரிஸ்வானுக்கு அவுட் கொடுக்கப்பட்ட பின்னர் இந்த விவாதங்கள் ஆரம்பமாகின. பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, அந்த அணியின் இயக்குனர் முகமது ஹபீஸின் கருத்தும் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது.
உண்மையில் நடந்தது என்ன..?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றியை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது, பாகிஸ்தான் அணியின் கைகளில் 5 விக்கெட்கள் இருந்த நிலையில், வெற்றிக்கு 98 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முகமது ரிஸ்வானும், சல்மான் ஆகாவும் கிரீஸில் உறுதியாக நின்று வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இங்குதான் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் எதிர்பாராத விதமாக அவுட் ஆனார். அதன் பின்னர் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் விக்கெட்களும் சரிந்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், முகமது ரிஸ்வானின் அவுட் இங்கு திருப்புமுனையாக அமைந்தநிலையில், அவருக்கு அவுட் கொடுத்த விதம் குறித்து சர்ச்சையாகி உள்ளது.
Wicket 250 for Pat Cummins! 🎉
— cricket.com.au (@cricketcomau) December 29, 2023
The third umpire decided the ball flicked Mohammad Rizwan's sweatband on the way through. #MilestoneMoment | @nrmainsurance | #AUSvPAK pic.twitter.com/vTuDL5DmNB
பேட் கம்மின்ஸின் டி.ஆர்.எஸ் முறையீடு:
முகமது ரிஸ்வான் 35 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் ஒரு பந்தை அபாயகரமாக வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த முகமது ரிஸ்வான் இதை எதிர்கொள்ள முடியாமல் குனிந்து கொண்டு பந்தை விடுவிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கைக்கும் ஹெல்மெட்டுக்கும் இடையில் கடந்து கீப்பரிடம் சென்றது. இங்கே பாட் கம்மின்ஸ் ஒரு மெல்லிய குரலைக் கேட்டு ஆன் பீல்டு அம்பயரிடம் முறையிட்டார். இங்கு கம்மின்ஸின் முறையீட்டை நடுவர் நிராகரிக்கவே, இந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ரிவியூ எடுக்க முடிவு செய்தார்.
பந்து மணிக்கட்டில் பட்டது..?
மூன்றாவது நடுவர், நீண்ட நேரம் வெவ்வேறு கோணங்களில் ரீப்ளேக்களை பார்த்த பிறகு, ஆன்-பீல்ட் அம்பயரை தனது முடிவை மாற்றுமாறு உத்தரவிட்டார். ஹாட் ஸ்பாட் மற்றும் ஸ்னிகோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரிஸ்வானின் மணிக்கட்டில் பந்து லேசாகத் தொட்டது. இதனால்தான், ரிஸ்வான் பெவிலியனுக்கு செல்லும்படி சைகை காட்டப்பட்டது. இதை ஏற்றுகொள்ள முடியாமல் முகமது ரிஸ்வான் அம்பயரிடம் பந்து என் மணிக்கட்டில் படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். நீண்ட நேர வாதத்திற்கு பிறகு கடுப்புடன் வெளியேறினார் முகமது ரிஸ்வான்.
முகமது ஹபீஸின் கருத்து:
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2வது போட்டியின் முடிவுக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையே பனிப்போர் வெடித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் ஹபீஸ், தோல்வியடைந்தாலும், போட்டியில் ஆஸ்திரேலியாவை விட பாகிஸ்தான் அணி சிறந்து விளங்கியது. ஹபீஸின் கருத்துக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “‘‘பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதுதான். ஆனால், நாங்கள்தான் வெற்றி பெற்றோம். இறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதுதான் முக்கியம்.
இந்த போட்டியின்போது ஒரு டிஆர்எஸ் அழைப்பு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சில முடிவுகள் நமக்கு சாதகமாகவும், சில முடிவுகள் எதிர் அணிக்கு சாதகமாகவும் அமையும்.” என்று தெரிவித்தார்.