TPL : தமிழ்நாடு பிரீமியர் லீக் : கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்..!
சர்வதேச போட்டிகளில் ஒருகோடி வீரர்களை விளையாட வைத்து, தமிழகத்தை சர்வதேச நாடுகள் திரும்பிப்பார்க்கும் நிலை உருவாக்குவோம் என அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் துவக்க விழா சேலம் மாவட்டம் கந்தாஸ்ரமம் பகுதியில் எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். குறிப்பாக கிரிக்கெட் போட்டியில் தொடக்கமாக அமைச்சர் மெய்யநாதன் பேட்டிங் செய்தும், பந்து வீசியும் அசத்தினார்.
அப்பொழுது அமைச்சர் பந்து வீசும்போது பேட்டிங் செய்தும், அதேபோன்று அமைச்சருக்கு பந்து வீசியும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் விளையாடினார். இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளிலும் ஏழை, எளிய கிராமத்து இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டுப் போட்டி துவக்கவிழாவில் இளைஞர்களின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற 15 மாத காலங்களில் முதல் முறையாக தற்போது தான் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்துள்ளதாக பேசினார். மேலும் அதிக மக்களால் பார்க்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் மாறியுள்ளது என்றும், அடித்தட்டு கிராமப்புற இளைஞர்களை மேலே கொண்டுவரும் முயற்சியில், இந்த போட்டி துவங்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
மேலும் இந்த விளையாட்டு போட்டிக்காக சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணிகளுக்கும் 11 சிறந்த வீரர்களை தேர்வு செய்து நேர்மையாக தேர்வாளர்கள் செயல்பட்டுள்ளனர். விளையாட்டு வீரர்கள் எப்பொழுதும் அணியை வெற்றி பெற செய்யவேண்டும் என்ற மன உறுதியுடன் விளையாட வேண்டும், இதற்கு முறையான பயிற்சி மேற்கொள்வது அவசியமான ஒன்று, எனவே மன உறுதி மட்டுமே நம்மை வெற்றி பெற செய்யும் என்று கூறினார். மேலும் உலகம் விழித்துக் கொள்ளும் முன்பே பயிற்சியை துவங்கி மேற்கொண்டால் மட்டுமே சிறந்த முறையில் விளையாட முடியும் என்றும் வீரர்களுக்கு அறிவுரை கூறினார்.
குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. அனைவரும் இருக்கையில் நுனிப்பகுதியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சுவாரசியமாக நடைபெற்றது. இந்திய வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவருடைய பிரார்த்தனையாக இருந்தது. இந்திய வெற்றி பெற்றவுடன் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
தமிழக முதல்வர் விளையாட்டு துறைக்கு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு உள்ளார். கடந்த 15 மாத கால ஆட்சியில் விளையாட்டு வீரர்களையே அதிகம் சந்தித்து பேசியுள்ளார். நீங்களும் வெற்றி பெறும் வீரராக மாறும் போது முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என பேசினார். தமிழகத்தில் உலக சதுரங்க போட்டியை நடத்தி 150 நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்து வைத்தது திராவிட மாடல் ஆட்சியில் தான் என பெருமிதம் தெரிவித்தார். ஒரு கோடி வீரர் வீராங்கனைகளை தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என்ற முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.தற்போது 25 லட்சம் வீரர்கள் விளையாட வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒரு கோடி வீரர்களை விளையாட வைத்து சர்வதேச அளவில் தமிழகத்தை திரும்ப பார்க்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.