IND Vs IRE, T20 WC Records: ஹிட்மேன் ரோகித் பெயரில் குவிந்த சாதனைகள் - தோனி சாதனை தகர்ப்பு, அப்ப கோலி?
IND Vs IRE T20 WC Records: ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
IND Vs IRE, T20 WC Records: ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா Vs அயர்லாந்து மோதல்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் டி-20 உலகக் கோப்பை தொடங்கி, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி நேற்று நடைபெற்ற தனது முதல் லீக் போட்டியில், அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 16 ஓவர்கள் முடிவில் வெறும் 96 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இந்திய அணி அபார வெற்றி:
இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், கோலி வெறும் 1 ரன்னில் நடையை கட்டினார். இருப்பினும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த கூட்டணி இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்களை சேர்க்க, 37 பந்துகளில் 52 ரன்களை குவித்த ரோகித் காயம் காரணமாக வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 12.2 ஓவர்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல், 36 ரன்களை சேர்த்தார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி வீரர்கள் பல புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
ரோகித் & கோ படைத்த சாதனைகள்:
- நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், சர்வதேச டி-20 போட்டிகளில் ரோகித் சர்மா 4000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி-20 போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில், கோலியை (4038) தொடர்ந்து ரோகித் இரண்டாவது உள்ளார்
- டி-20 உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 1000 ரன்களை பூர்த்தி செய்தார். முன்னதாக கோலி மற்று ஜெயவர்தனே ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதில் டெஸ்ட் போட்டிகளில் விளாசிய 84 சிக்சர்கள், ஒருநாள் போட்டிகளில் விளாசிய 323 சிக்சர்கள் மற்றும் டி-20 போட்டிகளில் விளாசிய 193 சிக்சர்களும் அடங்கும்
- நேற்றைய வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் 300 வெற்றிகளை பூர்த்தி செய்துள்ளார். முன்னதாக தோனி மற்றும் கோலி ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்து இருந்தனர்.
- 55 போட்டிகளில் விளையாடி 42 வெற்றிகளை பெற்றுள்ள ரோகித் சர்மா, ஆண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக, 72 போட்டிகளில் 41 வெற்றிகளை பெற்ற தோனி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்
- அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல், காட் & பவுல்ட் முறையில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், டி-20 போட்டிகளில் காட் & பவுல்ட் முறையில் 50 விக்கெட்டுகளை அவர் பூர்த்தி செய்துள்ளார்.