Joe Root : டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?: ஜோ ரூட் விளக்கம்
நான் ஜாம்பியை (Zombie) போன்று உணர்ந்தேன்; என்னால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (31 வயது) தெரிவித்தார்.
நான் ஜாம்பியை (Zombie) போன்று உணர்ந்தேன்; என்னால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (31 வயது) தெரிவித்தார்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த ஜோ ரூட், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர் தோல்விகளால் கேப்டன் பதவியைவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் விலகினார்.
இதுதொடர்பாக அவர் இங்கிலாந்தின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேப்டன் பதவி என்னை பாதிக்க ஆரம்பித்தது. நான் வீட்டில் அதிக நேரத்தை செலவழித்தது கிடையாது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்னால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
அது மிகவும் முக்கியமானது என்று நான் எண்ணினேன். நான் பெரும்பாலான நேரங்களில் ஜாம்பியைப் போன்று உணர்ந்தேன். எனது குழந்தைகளிடம்கூட என்னால் நேரத்தை செலவிட முடியவில்லை. இதெல்லாம் எனக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு கிரிக்கெட் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், எனது குடும்பப் பொறுப்புகளை தட்டிக் கழிக்கவும் முடியவில்லை.
கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுப்பது அவ்வளவு சாதாரணமாக இருந்துவிடவில்லை. ஆனாலும், நான் அதைச் செய்தேன். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு நான் எதையோ செய்து முடித்தது போன்று உணர்ந்தேன். எனது தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி செய்ததை நான் எப்போதும் பெருமையாகக் கருதுகிறேன்.
View this post on Instagram
நாங்கள் செய்த சாதனையை நான் எப்போதும் பெருமையுடன்தான் பார்க்கிறேன். நான் கேப்டனாக இருந்த சமயத்தில் சக வீரர்கள் தேவையான ஒத்துழைப்பை நல்கினர். ஆட்டத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டதையும் நான் கவனித்தேன்.
கேப்டனாக இருக்கும்போது சக வீரர்கள் சகஜமாக பழகுவதற்கு தயங்குவார்கள். ஆனால், நான் அனைத்து வீரர்களுக்கும் உதவவும், ஆலோசனைகளை வழங்கவும் தயாராகவே இருந்திருக்கிறேன் என்றார் ஜோ ரூட்.