ICC Men's Cricketer of Year : ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்லப்போவது யார்? நிலவும் கடும் போட்டி!!
2021ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வெல்வதற்கு ஜோ ரூட், வில்லியம்சன், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாகின் ஷா அப்ரிடி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஐ.சி.சி. சார்பாக சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டிற்கான டெஸ்ட், கிரிக்கெட், ஒருநாள் என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய வீரரைத் தேர்வு செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
ஐ.சி.சி. சிறந்த வீரருக்கான விருதை பெறும் வீரர் யார் என்பது வரும் ஜனவரி 24-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஐ.சி.சி. சிறந்த வீரருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
ஜோ ரூட் : (இங்கிலாந்து)
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர், கடந்த 2021ம் ஆண்டில் மொத்தம் 18 சர்வதேச போட்டிகளில் ஆடி 6 சதங்களுடன் 1,855 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரியாக 58.37 சதவீதம் வைத்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரை கேப்டனாக இழந்தாலும், நடப்பாண்டில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம், சென்னையில் இந்தியாவிற்கு எதிராக இரட்டைச் சதம் அடித்தும் அசத்தியுள்ளார்.
கனே வில்லியம்சன் : (நியூசிலாந்து)
நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். தனது திறமையால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி சாதனை படைத்தார். 16 சர்வதேச போட்டிகளில் ஆடி ஒரு சதத்துடன் 693 ரன்களை சேர்த்துள்ளார். 2021ம் ஆண்டில் அவரது சராசரி 43.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.
முகமது ரிஸ்வான் : ( பாகிஸ்தான்)
பாகிஸ்தானின் விக்கெட் கீப்பரும், தொடக்க வீரருமான முகமது ரிஸ்வான் அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். 2021ம் ஆண்டில் 44 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 2 சதங்களுடன் 1,915 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 56.32 சதவீதம் ஆகும். இது மட்டுமின்றி விக்கெட் கீப்பராக அவர் 56 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். உலககோப்பை டி20யில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் இவரது பங்கும் அளப்பரியது.
ஷாகின் ஷா அப்ரிடி : (பாகிஸ்தான்)
கிரிக்கெட் உலகின் வளர்ந்து வரும் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ஷாகின் ஷா அப்ரிடி. 21 வயதான அவர் கடந்தாண்டு 36 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சாக 51 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றியது அமைந்துள்ளது. அவரது பந்துவீச்சு சராசரி 22.20 ஆக பதிவாகியுள்ளது. உலககோப்பை டி20 போட்டியில் இவரது பந்தில் ரோகித், கே.எல்.ராகுல் ஆட்டமிழந்த விதம் இவரது பந்துவீச்சின் சிறப்பம்சத்தை வெளிக்காட்டியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்