Ishant Sharma: சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆஸ்திரேலிய வீரர்.. ஒரு மாதமாக அழுத இஷாந்த் சர்மா..! நடந்தது என்ன..?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது மோசமான பந்துவீச்சின் காரணமாக தான் ஒரு மாதம் அழுததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது மோசமான பந்துவீச்சின் காரணமாக தான் ஒரு மாதம் அழுததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மோசமான நேரம்:
கிரிக்பஸ் தளம் நடத்திய ரைஸ் ஆஃப் நியூ இந்தியா நிகழ்ச்சியில், இஷாந்த் ஷர்மா கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டி தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான நேரம் என குறிப்பிட்டுள்ளார். இதைவிட என் கேரியரில் மோசமான நேரம் இருந்ததில்லை என்று நினைக்கிறேன் எனவும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
அந்த போட்டியில் நான் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததால் இந்திய அணி தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் நான் என்னுடைய வருங்கால மனைவியுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசியில் அவருடன் பேசும்போதெல்லாம் இதைப்பற்றி பேசி அழுதேன். கிட்டதட்ட நான் ஒரு மாதமாக அழுது கொண்டிருந்தேன் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்தப் போட்டிக்குப் பிறகு தோனி மற்றும் தவான் என்னுடைய அறைக்கு வந்து நான் நன்றாக விளையாடுவதாக சொல்லி உற்சாகப்படுத்தினார்கள். அந்த ஒரு போட்டியினால் நான் ஒருநாள் கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர் அல்ல என்ற ஒரு பார்வை என்னைச் சுற்றி உருவானது எனவும் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.
நடந்தது என்ன?
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 3வது ஒருநாள் போட்டி அக்டோபர் 19 ஆம் தேதி மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் எம்.எஸ்.தோனி 139 ரன்களும், விராட் கோலி 68 ரன்களும் விளாச 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 304 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என நினைத்த நேரத்தில் இஷாந்த் சர்மா வீசிய ஒரு ஓவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியாவுக்கு மூன்று ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இஷாந்த் சர்மா ஒரே ஓவரில் 30 ரன்கள் வாரி வழங்கினார். அவரது ஓவரை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் நான்கு சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார்.