SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
ஸ்வமித்வா திட்டத்தில், பிரதமர் மோடி 65 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இன்று சொத்து அட்டைகள வழங்கியிருக்கார். ஸ்மித்வா திட்டம் என்பது என்ன.? இதனால உங்க சொத்து பாதுகாப்பா இருக்குமா.? பார்க்கலாம்...

ஸ்வமித்வா திட்டம் என்பது என்ன.?
ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து, வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 'உரிமைகளின் பதிவு' வழங்குவதன் மூலம், கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஸ்வமித்வா திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மூலம், கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வமாக சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கியில் கடன் பெற்று அதன் மூலமாக நிதிநிறுவனக் கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளை குறைப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்து வரியை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும், கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்த திட்டம் உதவுகிறது.
2.25 கோடி சொத்து அட்டைகள் தயார்
இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. இது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கிராமங்களில் 92 சதவீதமாகும். இதுவரை, 1.53 லட்சம் கிராமங்களுக்கு, 2.25 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அதன்படி, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, கோவா, உத்தராகண்ட், ஹரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பல யூனியன் பிரதேசங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் வழங்கிய பிரதமர்
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு, 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை காணொலி காட்சி மூலம் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். ஒரே நேரத்தில் இத்தனை லட்சம் பயனாளிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கிய நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும்.
எட்டப்பட்ட 90 சதவீத இலக்கு
ஸ்மித்வா திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 3.44 லட்சம் கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் நிலங்களை கண்க்கீடு செய்து வரைபடம் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், தற்போது வரை 3.17 லட்சம் கிராமங்களில் கணக்கீடு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 90 சதவீதமாகும். முழுமையான இலக்கு 2026-ல் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்ட சோதனையில் மட்டுமே பங்கேற்ற தமிழ்நாடு
மத்திய அரசின் இந்த பிரமாண்ட திட்டத்தில் மொத்தம் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. அதில், தமிழ்நாடு, தெலங்கானா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் சோதனை கட்டத்தில் மட்டுமே பங்கேற்றன. மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தில் இணையவில்லை.
சொத்துகளை காப்பாற்ற சொத்து அட்டை
இந்த சொத்து அட்டைகளை வைத்திருப்பதன் மூலம், சொத்துகளை அபகரிக்கும் செயல் கட்டுப்படுத்தப்படும். நாட்டில், ஆதார் அட்டை இல்லாமல் எப்படி எந்த ஒரு பரிவர்த்தனையும் தற்போது செய்ய முடியாதோ, அதேபோல், இந்த சொத்து அட்டை இல்லாமல், சொத்து தொடர்பான எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய முடியாது. மொத்தத்தில், இத்திட்டம் மூலம் வழங்கப்படும் சொத்து அட்டைகள், நமது சொத்துகளை பாதுகாக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

