Sneha Deepti : குழந்தை பிறந்த பிறகு ஆடிய முதல் பெண் என்று சாதிப்பேன்..! இந்திய வீராங்கனை ஸ்நேகா தீப்தி நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்நேகா தீப்தி தன்னால் மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பெற்று விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்நேகா தீப்தி. இவர் கடந்த 2013ம் ஆண்டு தன்னுடைய 16வது வயதிலே இந்திய அணிக்காக அறிமுகமானார். வங்காளதேச தொடரில் மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்ட தீப்திக்கு அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனாலும், அவர் ஆந்திரா மகளிர் அணியின் ஏ அணி மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து ஆடினார்.
ஸ்நேகா தீப்திக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிலிப் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, கருவுற்ற தீப்திக்கு க்ரிவா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது எட்டு மாத குழந்தைக்கு தாயான தீப்தி தன்னால் மீண்டும் இந்திய அணிக்குள் வர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள தீப்தி, “ நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தவுடன், எனது கணவர் உன்னால் நிச்சயம் கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியும் என்று உத்வேகப்படுத்தினார். இது ஓராண்டு விடுமுறை. குழந்தை பிறந்த பிறகு இரண்டு மாதத்தில் உன்னால் உனது தொடர்ச்சியான பணிகளுக்கு திரும்ப முடியும் என்றார். தற்போது, எட்டு மாத குழந்தைக்கு தாய் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நான் மிகவும் உடல் எடை கூடிவிட்டேன். என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாடவே முடியாது என்று எண்ணினேன். ஆனால், பிறகு நினைத்துக்கொண்டேன். இது நானல்ல. என்னால் இப்படி வீட்டில் உட்கார முடியாது. என்னால் கிரிக்கெட்டை விட்டுத்தர முடியாது. என்னால் பேட் செய்யாமல் இருக்க முடியாது என்று எண்ணினேன். என்னுடைய அனைத்து கிரிக்கெட் வீடியோக்களையும் பார்த்தேன். என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும் என்று உணர்ந்தேன். நான் மீண்டும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிப்பேன்.
தற்போது வரை இந்திய அணிக்காக குழந்தை பிறந்த பிறகு யாரும் கிரிக்கெட் விளையாடியதில்லை. நான் முதல் பெண்ணாக அதைச் செய்ய விரும்புகிறேன். நான் இதைச் செய்தால் நான் கண்டிப்பாக பல பெண்களுக்கு விளையாட்டில் உத்வேகமாக இருப்பேன். நான் கண்டிப்பாக இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவேன்.”
இவ்வாறு அவர் கூறினார். நேகா தன்வார் தனக்கு குழந்தை பிறந்த பிறகு 3 வருடங்களுக்கு பிறகு இந்திய ஏ அணிக்காக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்